100 நாள் ஆட்சியில் ஒன்றும் பயனில்லை.. வெளிநடப்பு ஏன்?- எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: நீட் தேர்வு ரத்து குறித்து திமுக அரசு முதல் கையெழுத்து போடும் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
இன்றைய தினம் தமிழகத்தின் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக அவையில் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

பட்ஜெட்டை தாக்கல் செய்ய பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் போது 505-க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தீர்கள். தேர்தல் சமயத்தில் போது ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தான் போடும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் முதல்வர் கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இதற்கு எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை. மேலும் நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நீட் தேர்வுக்கு நன்கு படித்து தயாராகுங்கள் என மாணவர்களுக்கு தெளிவான அறிவுரையும் வழங்காமல், மாணவ சமுதாயத்தினரிடையே பெரிய குழப்பத்தை இந்த விடியா அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். எனவே நீட் தேர்வு ரத்துக்கு தீர்வு காணாததை கண்டிக்கிறோம்.
மாநிலத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்றறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கையில் அதிமுக அரசு என்ன கூறியிருக்கிறதோ அதையே ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளனர். பேட்டியின் போது 14 ஆவது நிதிக் குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் ரூ 75 ஆயிரம் கோடி இழப்பு என்றும் ரூ 25 ஆயிரம் கோடி திட்ட நிதி, முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்றும் ஒரு தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். 14ஆவது நிதிக் குழு குறிப்பிட்ட வரி, ஒரு உத்தேச மதிப்பீடுதான். ஆனால் அதுவே வசூலிக்கப்பட வேண்டிய வரி ஆகாது. அதே போல் செலவு பற்றியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்துமே அரிசி குடும்ப அட்டைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். 2006-11 ஆம் ஆண்டு திமுக அசு வழங்கிய கலர் டிவி, அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போருக்குத்தான் வழங்கப்பட்டது. இதே முறைதான் அதிமுக அரசிலும் பின்பற்றப்பட்டது. எனவே 2006 ஆம் ஆண்டில் அவர்களது அரசே இந்த தவறை செய்தது என்கிறார்களா, மேலும் இது தவறு எனில் திமுக அரசு தற்போது வழங்கிய கொரோனா நிதியில் அவர்கள் விரும்பிய மாற்றத்தை செய்திருக்கலாமே. எனவே ஊதாரித்தனமான செலவு செய்த முன்னாள் அரசு என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்த நிதி அமைச்சரை கண்டிக்கிறோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர், கழக நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவதை கடுமையாக கண்டிக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இப்படி பொய் வழக்கு போட்டு கழக தொண்டர்களின் வேகத்திற்கு தடை போட திமுகவினர் பகல் கனவு காண வேண்டாம். இது போன்ற பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். எனவே உண்மைக்கு புறம்பாக வழக்குகளை போட்டு பழி வாங்கும் எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசை கண்டிக்கிறோம்.
மூச்சுக்கு 300 தடவை பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுபவர் திமுக தலைவர் ஸ்டாலின். கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து திமுக அரசின் காவல் துறையினர் உள்ளே நுழைந்து சோதனை நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. சோதனையின் போது நமது அம்மா ஊழியர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அடுத்த நாள் வெளியிட வேண்டிய பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுவதற்கு எங்களை உள்ளே அனுமதியுங்கள் என்று காவல் துறையினரிடம் பத்திரிகை ஊழியர்கள் எவ்வளவு கெஞ்சியும் ஒருவரை கூட உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அன்றைய பத்திரிகை அச்சடிக்க முடியாமல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய நமது அம்மா நாளிதழ் வெளிவரவில்லை. இது போன்று பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம் என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications