அரசு கேபிள் கட்டணம் 50% குறைப்பு.. 10 லட்சம் இளைஞர்களுக்கு பைக் மானியம்! எடப்பாடியின் கடைசி அஸ்திரம்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.. இன்னும் சற்று நேரத்தில் மாநிலத்தில் பிரச்சாரம் முடியும் நிலையில், அனைத்து தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சில முக்கியமான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
சினிமாவில் கிளைமாக்ஸ் நெருங்கும் போது ஹீரோ அதிரடி காட்டுவது போல, 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இறுதிக்கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 297 வாக்குறுதிகளை எடப்பாடி அளித்துள்ள நிலையில், இப்போது கூடுதலாக பல்வேறு வாக்குறுதிகளை அவர் கொடுத்திருக்கிறார். இதில் மேலும் சில மெகா அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடியின் இந்த அறிக்கையில் ஹைலைட் இரண்டு விஷயங்கள்.. ஒன்று 'அம்மா இருசக்கர வாகனத் திட்டம்'.. இன்னொன்று அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு..! வேலைக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு தலா ரூ.10,000 மானியத்தில் பைக் வாங்க நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கேபிள் கட்டணம்
இது தவிர, கல்லூரி முடித்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் மையங்கள் மற்றும் சிறு தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 35% மானியம் என இளைய தலைமுறையைக் குறிவைத்துக் காய் நகர்த்தியுள்ளார். அதேபோல கேபிள் டிவி கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம் என அறிவித்து இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாதுகாப்பு விஷயத்திலும் சமரசம் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாவட்டத் தலைநகரங்களில் 24/7 இயங்கும் 'வார் ரூம்' அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதர வாக்குறுதிகள்
களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு இபிஎஸ் முக்கியத்துவம் அளித்துள்ளார்:
கட்டிடத் தொழிலாளர்கள்: பணியின் போது உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.
பனைத் தொழிலாளர்கள்: மரம் ஏறித் தவறி விழுந்து உயிரிழப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் உதவி.
விவசாயிகள்: மாம்பழத்திற்கு ஆதார விலை மற்றும் கிருஷ்ணகிரி மக்களின் 'அத்துக்கட்டு' பண்டிகைக்கு அரசு அங்கீகாரம்.
முந்திரித் தொழிலாளர்கள்: கடலூர், விழுப்புரம் மாவட்டப் பெண்களுக்கு விலையில்லா முந்திரி உடைக்கும் கருவிகள்.
திமுகவின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை'க்கு இணையாக, எடப்பாடி பைக் மானியம் மற்றும் கேபிள் டிவி கட்டணக் குறைப்பை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications