ஒற்றை ராஜ்யசபா சீட்.. அதிமுகவை நம்பி நடுத்தெருவில் நிற்கும் தேமுதிக.. பீதியில் பாமக!
சென்னை: அண்ணா திமுக எப்படியும் ஒரு ராஜ்யசபா சீட் தந்துவிடும்; மகனையோ சகோதரரையோ நாடாளுமன்றத்துக்குள் அனுப்பிவிடலாம் என இலவு காத்த கிளியாக கணக்குப் போட்டு காத்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் கனவை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசியல் களத்தில் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக எத்தனை கட்சிகளுடனும் பேரம் பேசக் கூடிய கட்சியாக இருந்தது தேமுதிகதான். திமுக, அதிமுக, பாஜக கூட்டணி என எந்த அணிக்குப் போனாலும் ஒரு ராஜ்யசப சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் நீண்டகாலமாக பிடிவாதமாக இருப்பது தேமுதிகதான்.

இந்த ஒற்றை ராஜ்யசபா சீட் கனவில்தான் அதிமுக கூட்டணியில் விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது தேமுதிக. திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கும் நிலையில் 2024 லோக்சபா தேர்தலின் போது கூட்டணியே இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அதிமுகவுக்கு கை கொடுத்தது தேமுதிக. கடந்த காலங்களில் அதிமுகவால் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இழிவுபடுத்தப்பட்ட கொடுமைகளைக் கூட மறந்து ஒற்றை ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுகவின் கைகளை இறுகப்பற்றி நின்றது தேமுதிக.
இதே நம்பிக்கையில்தான் ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, ராஜ்யசபா தேர்தல் வரப்போகிறது என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட உடனேயே, அதிமுக எங்களுக்கு ஒரு சீட் தருவதாக ஏற்கனவே கையெழுத்தே போட்டுக் கொடுத்துவிட்டது; எங்களுக்குதான் ராஜ்யசபா சீட் என முந்திக் கொண்டு அறிவித்தது தேமுதிக. ஆனால் அண்ணா திமுக தரப்போ கனத்த அமைதி காத்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே போடாக, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எந்த உறுதியும் வழங்கவே இல்லை என மறுத்துவிட்டார். அதிமுகவைப் பொறுத்தவரையில் 62 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்கள் தேவை. அதனால் அதிமுகவால் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். இந்த ஒரே ஒரு எம்பி பதவியையும் தேமுதிகவுக்கு விட்டுத்தர அதிமுக தயாரக இல்லை என்பதையே தற்போது எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் தேமுதிக அதிர்ச்சியில் உறைந்து நடுத்தெருவில் தள்ளப்பட்டுவிட்டது.
இதேபோல பாமக தரப்பும் அண்மையில் அன்புமணி ராமதாஸுக்காக ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுக தலைமையிடம் பேரம் பேசியது. பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி இல்ல திருமண விழா அழைப்பிதழ் கொடுத்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்தான் எங்களுக்கு கிடைக்கும்; அதையும் பாமகவுக்கு கொடுத்துவிட்டால் அதிமுகவில் பெரும் கலகமே வெடிக்கும்; அதனால் பாமகவுக்ககுராஜ்யசபா சீட் தரவே முடியாது என சொல்லப்பட்டுவிட்டது. ஆனாலும் பாமக தரப்போ, எப்படியாவது அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கிடையாது என முகத்தில் அறைந்தது போல எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்; இது பாமகவுக்குமான பதிலாகவும் இருக்குமோ என்கிற பீதியில் இருக்கிறதாம் தைலாபுரம் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications