நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம்.. 10,000 பேருக்கு அசைவ விருந்து.. தடபுடல் ஏற்பாடு!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10,000 பேருக்கு மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன் வறுவல் உள்ளிட்ட தடபுடலான அசைவ உணவுகள் தயார் செய்யப்பட உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 10) நடைபெற உள்ளது. இதில், சட்டசபை தேர்தல் குறித்தும், திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இதுதொடர்பாக முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பு கோரிக்கை குறித்தும், ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் குறித்தும் பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்க்க, அமித் ஷா வலியுறுத்துவதாக கூறப்படும் நிலையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றோரை, மீண்டும் இணைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
ஏற்கனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட கூட்டத்தை நடத்திக் காட்டினார். இந்நிலையில் தான் நாளை பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 10,000 பேருக்கு மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன் வறுவல் உள்ளிட்ட தடபுடலான அசைவ உணவுகள் தயார் செய்யப்பட உள்ளன. 2500-க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications