தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை.. சரவெடியாக மாறிய ஜெயக்குமார்
சென்னை: அண்ணாமலை கர்நாடகா சென்ற ராசி பாஜக தோற்றுவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களாக ஆளும் கட்சி திமுகவை விமர்சிப்பது மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சியான அதிமுகவைுயம் விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில் ஆங்கில ஊடகத்திற்கு அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். ஊழலை பொருத்தமட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன.

முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினரை கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் கோபமடைந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார். மாநில தலைமைக்கு தகுதியில்லாதவர். பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்த தமிழிசை, எல் முருகன் இது போன்று பேசியது இல்லை.
அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக- பாஜக கூட்டணி தொடரக் கூடாது என்பது போல் உள்ளது. கத்துக்குட்டியாக இருக்கிற அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது, பாரம்பரியமும் தெரியாது. தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்து செயல்படுகிறார். அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடிதான்.

கூட்டணியில் இருந்தால் எங்கள் நிழலில்தான் இருக்க வேண்டும். பிரதமராக மோடியே வரக் கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எங்கள் கட்சித் தலைவி ஜெயலலிதாவை இவர் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இவரை அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும்தான் கண்டிக்க வேண்டும். கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என சிலரை போல் நாங்கள் சூடு சொரணை இல்லாதவர்கள் இல்லை.
அண்ணாமலை கர்நாடகா சென்ற ராசி பாஜக தோற்றுவிட்டது. எங்கள் நிழலில் இருந்துதான் 4 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளனர். அந்த நன்றியை அண்ணாமலை மறக்க கூடாது. கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம் என கூறியது எனது தனிப்பட்ட கருத்து அல்ல என்றும் கட்சியின் கருத்தும் அதுதான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications