லியோ திரைப்பட தொல்லைகளுக்கு காரணம் என்னவாம் தெரியுமா.. கோதாவில் அதிமுக ஜெயக்குமார்
சென்னை: படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார். லியோ படத்தை ரெட் ஜெயண்டிற்கு தர வேண்டும். அப்படி தராததால் எல்லா விதமான தொல்லைகள்,பிரச்னைகள் தரப்படுகிறது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டி. ஜெயக்குமார், புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு அதிமுக இருக்காது என நப்பாசை கொண்டவர்களுக்கு பேரிடி விழும் வகையில் ஜெயலலிதா அவர்கள் கட்சியை இணைத்து, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தார்கள்.

அதிமுக: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி இருக்காது என்று சொன்னவர்கள், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக 2கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி உள்ளார். தமிழ்நாட்டை 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, மீண்டும் ஆளப்போகும் கட்சி, இதன் அடிப்படையில்தான் கட்சியின் 52ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது என கூறினார்.
லியோ சர்ச்சை: அப்போது செய்தியாளர்கள் சிலர் லியோ திரைப்படத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதா? என்று கேட்டனர், அதற்கு ஜெயக்குமார், எங்கள் ஆட்சி காலத்தில் திரைத்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டோம். இதே விஜய் எடப்படியாரை சந்தித்த பின்னர் ரிலீஸ் செய்யப்பட்டது.
இன்று லியோ படத்தை ரெட் ஜெயண்டிற்குதர வேண்டும். அப்படி தராததால் எல்லா விதமான தொல்லைகள்,பிரச்னைகள் தரப்படுகிறது.
ரெட்ஜெயண்ட்: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 10 ஆண்டுகளில் 20 முதல் 30 படங்களை மட்டுமே ரெட் ஜெயண்ட் வெளியிட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது.
அஜீத் பேச்சு: பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில், நடிகர் அஜித் என்ன சொன்னார். "நான் அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன்" என்ற சொன்னார். திரைக்கலைஞர்களை பயமுறுத்தி அச்சுறுத்தி சர்வாதிகாரம் கோலோச்சப்படுகிறது.
எங்கள் ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications