அதிமுக சார்பில் போட்டியிட ரூ.1 கோடி பேரம்.. கே.பி.முனுசாமி கேட்டதாக ஆடியோ.. ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு
கொளத்தூர் சட்டசபை தொகுதியில் சீட் பெற்று தர முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி 1 கோடி கேட்டதாக ஒரு ஆடியோ வெளியீடு
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் (2021) சீட் பெற்று தர முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ரூ 1 கோடி கேட்டதாக ஒரு ஆடியோவை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார்.
அது போல் சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி தன்னிடம் ரூ 1 கோடி பேரம் பேசிய ஆடியோவையும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி பேச்சு
அந்த ஆடியோவில் பேசும் நபர் அண்ணே வணக்கம் நான் கிருஷ்ணமூர்த்தி என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசும் நபர் (கே.பி. முனுசாமி என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்) சொல்லுமா என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசிய நபர் 50 லட்சம் ரூபாய் ரெடி செய்துவிட்டேன். அதை 11 மணிக்கு கொடுத்துவிடுகிறேன். மீதமுள்ள ரூ50 லட்சத்தை மாலைக்குள் ரெடி செய்கிறேன், தற்போது முதல் 50 லட்சம் பணத்தை எங்கே கொண்டு வரட்டும் என கேட்டார்.

ஆடியோ வெளியீடு
அதற்கு முனுசாமி என சொல்லப்படும் நபரோ நான் என் மகனை அனுப்புகிறேன். அவரிடம் கொடுத்துவிடு என்கிறார். இந்த ஆடியோவை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு போட்டு காண்பித்தார். மேலும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் கே.பி. முனுசாமி ஓபிஎஸ் கட்சிக்கு என்ன செய்தார் என கேட்கிறார்.

ஆடியோவுக்கு பதில் வேண்டும்
ஆனால் இந்த ஆடியோ மூலம் கே.பி .முனுசாமி பணத்திற்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் மட்டுமே உழைப்பவர் என தெரியவந்துவிட்டது. இதை தொண்டர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் நான் இந்த ஆடியோவை வெளியிட்டேன். அவர் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாவிட்டால் அவர் குறித்த வீடியோவையும் வெளியிடுவேன், அது போல் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
இந்த நிலையில் இன்னொரு ஆடியோவையும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். அதில் கே.பி. முனுசாமியின் கார் டிரைவருடன் பேசும் ஆடியோ: அந்த ஆடியோவில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் அண்ணே அவரிடம் பேசிவிட்டேன், முதலில் 50 லட்சம் தருவதாக கூறினேன், அவரது மகனை அனுப்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார், அவர் மகன் எப்போது வருவார் என அவருக்கு போன் செய்து பார்க்கட்டுமா என கேட்கிறார். அதற்கு ஓட்டுநர் என கூறப்படும் நபர், அதெல்லாம் வேண்டாம், அவருடைய மகன் ஒவ்வொரு இடமாக கலெக்ஷன் செய்துவிட்டு மதியம் போல் உங்களிடம் வருவார். ஒரு வேளை அவர் வரவில்லை என்றால் அவரது மகனுக்கு போன் செய்து பாருங்கள் என்கிறார். இப்படி இரு வேறு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் கட்சி பதவிகளுக்காகவும் தேர்தல் சீட்டுக்காகவும் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேரத்தில் இது போன்றதொரு ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications