எடப்பாடிக்கு ஏழரை ஆரம்பம்.. ஆதங்கத்தில் 7 தலைகள்! திமுகவுக்கும் போகலையா? விஜய் தான் சாய்ஸ்! பரபர
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா திமுகவில் சேர்ந்திருப்பது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் பல அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், குறிப்பாக ஏழு நிர்வாகிகள் கட்சி தாவ தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் திமுகவுக்கு செல்லாமல் அவர்கள் விஜய் பக்கம் சாய இருப்பதாக கூறி இருக்கிறார் பெங்களூரு புகழேந்தி.
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த போதிலும் அதிமுக ஆட்சியை இழக்க நேரிட்டது. அதற்கு பிறகு தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் செயல்பாடுகளால் கூட்டணி முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனாலும் கூட்டணியில் கருத்து மோதல்கள் எழுந்து வருவதையும் கவனிக்க வேண்டும். கூட்டணி ஆட்சி என பாஜக சொல்ல, நாங்கள் என்ன ஏமாளியா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி எனக் கூறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

பாஜக கூட்டணி
இதற்கு பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள் பதில் சொல்லி வரும் நிலையில் அதிமுகவிலிருந்து வழக்கமாக பேசும் யாரும் பதில் சொல்லவில்லை. காரணம், பாஜக கூட்டணியால் அதிமுக வாக்கு வங்கியில் பிளவு ஏற்படுவதோடு, சிறுபான்மை வாக்குகள் முழுமையாக கிடைக்காது. இதனால் தோல்வியை சந்திக்க நேரிடும் என பல நிர்வாகிகள் கருதுகின்றனர். மேலும் பாஜக கூட்டணியால் பலர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை வெளிக்காட்டும் வகையில் கட்சி தாவி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா.
அன்வர் ராஜா
கட்சியின் சிறுபான்மை தலைவர்களின் குறிப்பிட தகுந்த நபர் அன்வர் ராஜா. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவரது நம்பிக்கைக்குரிய தளபதிகளின் ஒருவராக இருந்தவர். அதனால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ், எடப்பாடி விவகாரத்தால் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார். இந்த நிலையில் 2026 தேர்தலுக்காக பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபோது எதிர்ப்பு தெரிவித்தவர் அன்வர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தாவும் படலம்
மேலும் இந்த கூட்டணியால் சிறுபான்மை சமுதாயத்தினர் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனக் கூறினார். அவர் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாக தெரிந்த நிலையில், அதனை அதிமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று அதிரடியாக திமுகவில் சேர்ந்தார். அப்போது அவரை அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற எவ வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில், அன்வர் ராஜா அம்பு தான் எனவும், அவரை ஏவி விட்ட பலர் அதிமுகவில் இன்னும் இருக்கின்றனர், அதிமுகவினர் கட்சி தாவும் படலம் தொடரும் என்கிறனர்.
திமுக
குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்ற தலைநகரை சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் பெண் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் என ஏழு பேர் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் கட்சியில் இருந்து விலகி திமுக தரப்பில் சேரலாம் என சொல்லப்படுகிறது.
விஜய் அழைப்பு
இந்த நிலையில் திமுகவிலிருந்து விலகும் முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவுக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும், தமிழக வெற்றிக் கழகம் அவர்களின் சாய்ஸாக இருக்கும் என்கிறார் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி. இதுதொடர்பாக பேசி இருக்கும் அவர்," பெரியார் சித்தாந்தத்தால் கவரப்பட்டு திமுக மற்றும் அதிமுக 50 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இரு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் வேறு கட்சிகளுக்கு செல்ல மாட்டார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் திமுகவில் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படி செல்ல மாட்டார்கள்.
7 முன்னாள் அமைச்சர்கள்
உண்மையான ஜெயலலிதா விசுவாசிகள் எப்போதும் திமுக பக்கம் செல்ல மாட்டார்கள். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் சங்கடத்தில் இருக்கும் அவர்கள் விஜயின் பக்கம் செல்லலாம். காரணம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது கொள்கைகளை விஜய் முன்னிறுத்துகிறார். அந்த வகையில் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் 7 முன்னாள் அமைச்சர்கள் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications