அதிமுகவில் இருந்து சிங்கை ராமச்சந்திரன் விலகல்.. பரபரப்பு கடிதம்.. எடப்பாடிக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மாணவரணி மாநில செயலாளரும், முன்னாள் ஐ.டி விங் தலைவருமான சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அண்ணாமலையை எதிர்த்து கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டிருந்தார் சிங்கை ராமச்சந்திரன்.

அதிமுக மாணவரணி மாநில செயலாளராகச் செயல்பட்டு வந்தவர் சிங்கை ராமச்சந்திரன். அதற்கு முன்பு, அதிமுக ஐடி விங் தலைவராகவும், மண்டல செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சிங்கை ராமச்சந்திரன். அவரது விலகல் கடிதம் அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

AIADMK Leader Singai Ramachandran

சிங்கை ராமச்சந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: "நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, நான் தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன் என்பதை இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவை நான் கோபத்திலோ, வருத்தத்திலோ, அல்லது எந்தவித தனிப்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறாததாலோ எடுக்கவில்லை. என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை, அஇஅதிமுக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, என் குடும்பத்தின் ஒரு அங்கம். அதனால், இது எனக்கு ஒரு அரசியல் கடிதம் அல்ல. என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து எழுதும் ஒரு மனப்பூர்வமான கடிதம். 1987-ஆம் ஆண்டு, என் தந்தை மறைந்த சிங்கை கோவிந்தராசு, வார்டு செயலாளராக இருந்தபோது, எம்.ஜி.ஆர்., என் பெற்றோரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியது எங்கள் குடும்பம் பெற்ற பெரும் பாக்கியம். எனக்கு ஜி. ராமச்சந்திரன் என்ற பெயரை வைத்தது ஜெயலலிதா. ஒரு சாதாரண மில் தொழிலாளியாக இருந்த என் தந்தையை சட்டமன்ற உறுப்பினராக உயர்த்தியதும் ஜெயலலிதாதான். என் தந்தை திடீரென மறைந்த பிறகு, என் தாய் அனைத்து சிரமங்களையும் தனியாக எதிர்கொண்டு, என்னை நல்ல கல்வியுடனும் உயர்ந்த பண்புகளுடனும் வளர்த்தார்.

சிறு வயதிலிருந்தே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அவருடைய தலைமையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் வாழ்நாளின் ஒரே கனவாக இருந்தது. 18 வயதில் கட்சியில் சேர்ந்த நான், பின்னர் இளைஞர் பாசறை வார்டு செயலாளராக நியமிக்கப்பட்டேன். ஜெயலலிதாவைச் சந்திக்க பலமுறை முயற்சி செய்தேன். போயஸ் கார்டன் சாலையில் பல மணி நேரம் காத்திருந்த நாட்களும் உண்டு. படித்த இளைஞர்களை ஜெயலலிதா மிகவும் மதிப்பார் என்பதால், அவருடைய கவனத்தை என் கல்வியின் மூலம் பெற வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக முழுமையாக உழைத்தேன்.

மனம் தளராமல் தொடர்ந்து முயன்று, CAT தேர்வின் மூலம் 2013-ல் IIM ஹைதராபாத்தில் சேர்ந்தேன். அங்கு நடைபெற்ற தேர்தலில் மாணவர் நலப் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பெரும்பாலானவர்கள் IIM-ல் படிப்பது பெரிய நிறுவனங்களில் வேலை பெறுவதற்காக. ஆனால் நான் அங்கு படித்ததற்கான நோக்கம் வேறு. படிப்பு முடிந்ததும் வளாக வேலைவாய்ப்புகளை வேண்டுமென்றே நிராகரித்து, ஜெயலலிதாவின் தலைமையில் பணியாற்றப் போகிறேன் என்று வெளிப்படையாக அறிவித்தேன்.

அந்த செய்தி ஜெயலலிதாவின் கவனத்திற்குச் சென்றது. சில மாதங்களுக்குப் பிறகு, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளராக என்னை நியமித்தார். அது என் வாழ்க்கையின் மறக்க முடியாத திருப்புமுனையாக அமைந்தது. 2016 மார்ச் 21 அன்று, நான் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தேன். எனக்குப் பெயர் சூட்டிய தலைவரும், என் குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய தலைவரும் என் முன்னால் நின்ற அந்த நொடியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. சிறு வயதிலிருந்தே நான் சுமந்து வந்த கனவு அந்த நாளில் நனவானது.

அப்போது ஜெயலலிதா என்னிடம் கூறிய வார்த்தைகள் இன்றும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. "உங்க அப்பா கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். நீங்களும் அவரைப் போல இருக்க வேண்டும்." அதை நான் ஒரு சாதாரண அறிவுரையாக எடுத்துக்கொள்ளவில்லை. என் வாழ்க்கைக்கான பொறுப்பாக ஏற்றுக்கொண்டேன்.

கட்சி எனக்கு வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றினேன். தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர், மண்டல செயலாளர், மாநிலத் தலைவர், மாணவர் அணி மாநில செயலாளர் என எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் முழு மனதுடன் பணியாற்றினேன். அவற்றில் எனக்கு மிகுந்த நிறைவைத் தருவது, 100-க்கும் மேற்பட்ட இளம் கட்சி பேச்சாளர்களை உருவாக்கியதுதான். 2016, 2019, 2021 மற்றும் 2026 தேர்தல்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாக உழைத்தேன்.

2024 மக்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் என்னை வேட்பாளராக அறிவித்தபோதும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், பொருளாதார ரீதியாகவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தன. என் கருத்துகளையும் கவலைகளையும் கட்சித் தலைமையிடம் முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்தேன். ஆனால், என் மனசாட்சியுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது, இந்த முடிவைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விலக முடிவு செய்தேன்.

இந்த நேரத்தில், என்மீது நம்பிக்கை வைத்து பல்வேறு வாய்ப்புகளை வழங்கிய எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வழிநடத்திய மூத்த தலைவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் என்னுடன் இணைந்து பயணித்த அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கட்சியில் இருந்து விலகலாம். ஆனால், எம். ஜி. ஆர், விதைத்த மனிதநேயமும், ஜெயலலிதா என் மீது வைத்த நம்பிக்கையும் என் வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்திக் கொண்டே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+