எல்லா பேருந்திலும் இலவசம் என்றால்... பஸ் கம்பெனியை எப்படி நடத்துவது? செல்லூர் ராஜூ Vs ராஜகண்ணப்பன்!
சென்னை: எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத்துக்கு அனுமதித்தால் அரசாங்கத்தால் எப்படி பஸ் கம்பெனியை நடத்த முடியும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வினவியிருக்கிறார்.
சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், பெண்கள் எல்லோரும் அரசின் இலவச பயண திட்டத்தால் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள் என்றும் செல்லூர் ராஜூ தான் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலாய்த்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 4-ம் நாளான இன்று பரபரப்புக்கும், சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லாமல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேள்வி நேரத்தின் போது எழுந்த அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, சபாநாயகருக்கு கோடான கோடி நன்றி என்றும், பல மாதங்களாக பேசுவதற்கு வாய்ப்பு கேட்டும் இன்று தான் தனக்கு பேச வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ
மேலும், குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் பெண்கள் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, பொத்தாம் பொதுவாக இப்படி பேசக்கூடாது என சபாநாயகர் குறுக்கிட்டார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
ஆனால் செல்லூர் ராஜூ விடுவதாக இல்லை, பெண்களின் குரலாக நான் இதை இங்கு ஒலிக்கிறேன் எனக் கூறினார். அவரது கேள்விக்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பெண்கள் எல்லோரும் அரசின் இலவச பயண திட்டத்தால் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள் என்றும் செல்லூர் ராஜூ தான் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார் போல என்று கலாய்த்தார்.

ரூ.48,000 கோடி
மேலும், எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத்துக்கு அனுமதித்தால் அரசாங்கத்தால் எப்படி பஸ் கம்பெனியை நடத்த முடியும் எனவும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.48,000 கோடி கடனில் இருப்பதாகவும் தெரிவித்தார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த நிகழ்வு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications