வாணியம்பாடி கொலை & நீட் தீர்மானம் பேச்சுக்கு அனுமதி மறுப்பு.. சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா மற்றும் வாணியம்பாடி கொலை சம்பவம் தொடர்பாகப் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபையின் இறுதி நாள் இன்று நடைபெறுகிறது. இன்று நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இரு வேறு விஷயங்களில் பேச வாய்ப்பு அளிக்க மறுக்கப்படுவதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

காரசார விவாதம்
முன்னதாக நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா தொடர்பாக திமுக- அதிமுகவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரையில்கூட தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதைச் நிறைவேற்றாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், நேற்று நீட் அச்சம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் பற்றிக் குறிப்பிட்டும் அவர் சில கேள்விகளை எழுப்பினார். திமுக தற்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் விரைவில் நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு பெறப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

வாணியம்பாடி கொலை
அதேபோல திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் சமூகநல ஆர்வலரான மஜக பிரமுகர் வசீம் அக்ரம் தொழுகை முடிந்து வீடு திரும்பிய போது, 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்று தலையைத் துண்டித்துச் சென்றது. இது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார், கஞ்சா விற்பனை குறித்த தகவல் தந்த மஜக நிர்வாகி கொல்லப்பட்டுள்ளார் என்றும் கொலை செய்தவர்களைக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்
இதற்குப் பதிலளிக்க முதல்வர் ஸ்டாலின், "இந்த கொலை சம்பவத்தில் இதுவரை இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video

அதிமுக வெளிநடப்பு
இதையடுத்து நீட் தேர்வு தொடர்பாகவும், வாணியம்பாடி கொலை வழக்கு தொடர்பாகவும் பேச முயன்ற தங்களைப் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேறினர்.

சேலம் மாணவர் தற்கொலை
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியிலுள்ள கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார். இவரது இரண்டாவது மகன் தனுஷ். 19 வயதான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு மேட்டூரில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் +2 படித்திருந்தார். ஏற்கனவே இவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுத்திருந்தார். மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தார். இந்தச் சூழலில் நீட் அச்சம் காரணமாக நேற்று காலை வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திமுக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் மாணவர் தனுசின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications