முகத்தை மூடிய எடப்பாடி? நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக! சென்னை பிரஸ் கிளப் கண்டனம்!
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியபடி வெளியே வந்ததாக செய்தி வெளியிட்ட நிரஞ்சன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் செயல்பாடு பத்திரிகை சுதந்திரத்தை மீறுவது போல இருப்பதாக சென்னை பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பு முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டார்.
அப்போது அவர் முகத்தை மூடியபடி சென்றதாக ஊடகங்களில் செய்தியாளராகப் பணியாற்றியவரும், தற்போது தனியே டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வரும் நிரஞ்சன் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டார்.

எடப்பாடி அமித்ஷா
இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பேசுபொருளான நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முகத்தை துடைத்த வீடியோவை முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக நிரஞ்சன் அவதூறு செய்தி பரப்பியதாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையெனில், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக நோட்டீஸ்
இந்த நிலையில் அதிமுகவின் நோட்டீசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்," டெல்லியில் வசிக்கும் பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் பல்வேறு முன்னணி தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது "தி கேபிடல்" என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், பல்வேறு ஊடகங்களுக்கு தலைநகர் டெல்லியில் நடைபெறும் செய்திகளையும் வழங்கிவருகிறார்.
நிரஞ்சன் குமார்
இந்நிலையில், நேற்று (16.09.2023) அதிமுக பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்த நிகழ்வு குறித்து திரு.நிரஞ்சன் குமார் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது, சந்திப்பை முடித்துவிட்டு காரில் வெளியே வந்த திரு.எடப்பாடி பழனிசாமி முகத்தை கைக்குட்டையால் மூடியிருந்தது குறித்த செய்தியை வீடியோ ஆதாரத்துடன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த செய்தி அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அதிமுக தரப்பில், திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
அந்த விளக்கமும் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக அதிமுக சார்பாக திரு.நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிமுக சமூக வலைதளப் பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் தலையும் இல்லாத, வாலும் இல்லாத அந்த மொட்டைக் கடிதமும் அத்துடன் பகிரப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், திரு.நிரஞ்சன் குமார் அவர்களுக்கு எதிராக, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவரை மிகவும் தவறாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், திரு.நிரஞ்சன் குமாரை மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
பத்திரிகை உரிமை
அந்தக் கடிதம், திரு.நிரஞ்சன் குமார் மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கும், விகடன் நிறுவனத்திற்கும் எதிராக கீழ்த்தரமான கருத்தைத் தெரிவித்த பாஜக மாநிலத்தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை வரவேற்கும் வகையிலும் அமைந்துள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிடமிருந்து பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இப்படி ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதிமுக சர்ச்சை
ஆகவே, பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமாருக்கு எதிராக அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய அதிமுக தன் பொறுப்பை உணர்ந்து நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications