கர்நாடகா: புலிகேசி நகர், காந்தி நகர், கோலாரில் அதிமுக ஓபிஎஸ் அணி போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர், பெங்களூர் காந்தி நகர் மற்றும் கோலார் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைகிறது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, ஜேடிஎஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை இழக்கும்; காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறி வருகின்றன.
கர்நாடகா தேர்தல் களத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் பாஜகவில்தான் உட்கட்சி பூசல் மிக அதிகம். பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட ஏராளமான தலைகள் ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிக்கு நித்தம் நித்தம் தாவி வருகின்றனர்.
இந்த களேபர சூழ்நிலையில் கர்நாடகா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுகவும் விரும்பியது. கர்நாடகாவிலேயே உட்கட்சியிலேயே மிகப் பெரிய குழப்பம் இருக்கும் நிலையில் அதிமுகவின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென வேட்பாளரை அறிவித்தார்.

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அதிமுக இபிஎஸ் அணியின் கர்நாடகா மாநில அவைத்தலைவராகவும் அன்பரசன் இருந்து வருகிறார். இந்த அறிவிப்பை வெளியிட்ட கையுடன், இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியது இபிஎஸ் தரப்பு.
தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் தரப்பு அளித்த மனுவில், கர்நாடகா தேர்தலில் வேட்பாளரை அறிவித்துவிட்டோம். வேட்புமனுத் தாக்கல் செய்ய வியாழக்கிழமை இறுதி நாள். ஆகையால் அதிமுக பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரித்து உடனே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென அதிமுக ஓபிஎஸ் அணி இன்று அதே புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதாவது கர்நாடகா புலிகேசி நகர் தொகுதியில் பாஜக, அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர்களை எதிர்த்து அதிமுகவின் ஓபிஎஸ் அணி வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூர் காந்தி நகர் தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் சட்டசபை தொகுதியில் அனந்தராஜா ஆகியோரையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது ஓபிஎஸ் அணி. கர்நாடகாவில் மொத்தம் 3 தொகுதிகளில் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை அறிவித்து களமிறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications