அதிமுக பிரிமீயர் லீக்.. அடித்துக் கொள்ளும் 6 அணிகள்! ஆர்சிபி போல கோப்பையை வெல்லப் போவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் இறுதிப் போட்டியைப் போல பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது அதிமுக உட்கட்சி விவகாரங்கள். எடப்பாடி அணி, சசிகலா அணி, டிடிவி அணி, ஓபிஎஸ் அணி, புகழேந்தி அணி வரிசையில் தற்போது செங்கோட்டையன் அணி அதிமுகவில் உருவாகி இருக்கிறது. ஆர்சிபி போல கடைசி நேரத்தில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் எனப் பெயர் பெற்றது அதிமுக. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு பல அணிகளாகச் சிதறுண்டு கிடக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராகப் பதவி ஏற்ற நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என சசிகலாவை முதல்வராக்க ஏற்பாடுகள் நடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் திரண்டனர்.

AIADMK Power Struggle

அதிமுக குழப்பம்

தொடர்ந்து கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்ட நிலையில் வழக்கு ஒன்றின் காரணமாக சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். உண்மையில் செங்கோட்டையன் தான் சீனியர் என்ற முறையில் முதல்வராகப் பதவி ஏற்க இருந்ததாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த யோகம் அடித்தது எனச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எடப்பாடி தலைமை

டிடிவி தினகரனுடன் 9 எம்எல்ஏக்கள் சேர்ந்ததால் ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஓபிஎஸ் எடப்பாடியுடன் கைகோர்த்தார். டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஓபிஎஸ் மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவளித்தார். தொடர்ந்து சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால் சசிகலாவோ நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என இன்று வரை அதிமுகவின் பெயரையும் லெட்டர் பேடையும் பயன்படுத்தி வருகிறார்.

ஓபிஎஸ் அதிமுக

இது ஒரு புறம் இருக்க நான்காண்டு ஆட்சிக்காலத்தின்போது எடப்பாடி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் என்ற கோபம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்தது. 2021 தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. இதை அடுத்து வைத்தியலிங்கம், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோருடன் வெளியேற்றப்பட்டார் ஓபிஎஸ். தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் கைகொடுக்காத நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.

சசிகலா - டிடிவி - ஓபிஎஸ்

அப்போதைய சூழ்நிலையில் எடப்பாடி, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் என நான்கு அணிகள் இருந்தன. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் பெங்களூர் புகழேந்தி, ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோரைச் சேர்த்துக்கொண்டு தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் எடப்பாடி அணி, சசிகலா அணி, டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, புகழேந்தி என ஐந்து அணிகளாக செயல்பட்டு வந்தன.

செங்கோட்டையன் அணி

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த நிலையில் இன்று திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் அவரது ஆதரவாளர்களும் துரத்தியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் தங்களுக்கும் கட்சியில் பதவி வேண்டாம் என செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதிமுகவில் 6 அணிகள்

இதனால், செங்கோட்டையன் தனி அணியாக செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் யாருடன் சேரப் போகிறார் என்ற தகவலும் இல்லை. ஆனால் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியைச் செய்வேன் என செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அந்த வகையில் அதிமுக தலைமைக்கான போட்டியில் தற்போது எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், பெங்களூர் புகழேந்தி, செங்கோட்டையன் என ஆறு அணிகள் செயல்பட்டு வருகின்றன.

யாருக்கு தலைமை?

17 ஆண்டுகள் இல்லாமல் கடைசியாக ஆர்சிபி கோப்பையை வென்றது போல இறுதி நேரத்தில் அதிமுக தலைமையை கைப்பற்றப் போவது யார்? அதிமுக மீண்டும் சேருமா? அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டவர்களாகவே தொடர்வார்களா? செங்கோட்டையன் தனித்து செயல்படுவாரா? அல்லது யாருடன் கூட்டணி சேர்வார் என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஐபிஎல் போல அதிமுக பிரீமியர் லீக் தற்போது சூடு பிடித்திருக்கும் நிலையில், அதிமுக தொண்டர்கள் தான் குழப்பமான மனநிலையில் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+