கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!
கோவை: கொங்கு மண்டலம் எங்களின் எஃகு கோட்டை என்று மார்தட்டிக் கொள்ளும் அதிமுகவின் முகத்திரை, உட்கட்சிப் பூசலால் கோவையிலேயே கிழிந்து தொங்கத் தொடங்கியுள்ளதாக அதிமுக தொண்டர்களே புலம்பி வருகின்றனர். கோவை அதிமுக மாவட்ட செயலாளராகப் புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட செ.ம.வேலுசாமியின் பதவியேற்பு விழாவை, முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி. வேலுமணி வெளிப்படையாகப் புறக்கணித்த சம்பவம் அக்கட்சிக்குள் மையம் கொண்டிருந்த கோஷ்டி மோதலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான 'இதய தெய்வம் மாளிகையில்' ஞாயிறன்று புதிய மாவட்ட செயலாளர் செ.ம. வேலுசாமியின் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இதில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த விழாவில் ஒட்டுமொத்த கோவை அதிமுகவையே இத்தனை காலமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் மாவட்ட செயலாளரான எஸ்.பி. வேலுமணியும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இந்த அதிரடிப் புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத புதிய மாவட்ட செயலாளர் வேலுசாமி, இது பொது மேடை, பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூட மறந்துவிட்டு, தனது விரக்தியை மைக் பிடித்து வெளிப்படையாகவே புலம்பித் தீர்த்தது அங்கிருந்த அதிமுக தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பொதுவெளியில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோவில், அனைவரையும் தான் நேரில் அழைத்ததாகக் கூறும் வேலுசாமி, தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் வரவில்லை எனச் சமாளிக்க முயன்றாலும் அவரது குரலில் விரக்தி அப்பட்டமாகவே வெளிப்பட்டது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "வாட்ஸ்அப்பில் தேவையில்லாமல் ஒருவரையொருவர் டேமேஜ் செய்கிறார்கள், தயவுசெய்து கோஷ்டியாகச் செயல்பட வேண்டாம்" எனத் தனது கட்சியின் நிர்வாகிகளையே அவர் மன்றாடிக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் அதிமுகவின் தற்போதைய உச்சக்கட்ட அவல நிலை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்டுக்கோப்பாக இருப்பதாகத் தலைமை தொடர்ந்து சொல்லி வருகிறது.
ஆனால், கட்சியின் அசைக்க முடியாத கோட்டை என அவர்கள் மார்தட்டிக்கொள்ளும் கோவையிலேயே 'வேலுமணி கோஷ்டி' என்றும், 'வேலுசாமி கோஷ்டி' என்றும் நிர்வாகிகள் இரு துருவங்களாகப் பிரிந்து கிடப்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
பதவியேற்பு விழாவிலேயே தலைமைக்கு சவால் விடும் வகையில் இப்படி ஒரு புறக்கணிப்பு அரசியல் அரங்கேறியுள்ள நிலையில், இனி வரும் தேர்தல் காலங்களில் இவர்கள் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. தலைவர்களின் இந்த ஈகோ யுத்தத்தையும், பனிப்போரையும் பார்த்து, அடுத்து என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் அடிமட்டத் தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.












Click it and Unblock the Notifications