பிளான் - பி.. அதிமுக - தவெக கூட்டணி ஆட்சி! விஜய் போடும் மனக் கணக்கு! எடப்பாடி திட்டமும் இதுதானா?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும், ப்ளான் பி-ஐ அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி தயார் செய்து வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு தேவைப்பட்டால் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் யூகங்கள் உலாவி வருகின்றன. பாஜக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வதற்கே விஜய் எடப்பாடியுடன் கூட்டணி சேராமல் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
2026 தேர்தலில் திமுகவை எதிர்க்கத் தயாராகி வரும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. முன்னதாக அதிமுக - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமையலாம் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தையின் போது, மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 80 சட்டமன்றத் தொகுதிகள் வரை விஜய் கேட்டதாகவும், ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளாததால் அதிமுக தவெக கூட்டணி முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்டது.

அதிமுக பிளான் பி
இதற்கிடையே தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி இருக்கும் தவெக தலைவர் விஜய் வழக்கம் போல பாஜகவை லேசாக விமர்சிக்கிறார். தனது பேச்சின் பெரும்பாலான பகுதி முழுவதும் திமுக எதிர்ப்பையே பிரதானமாக வைத்திருக்கிறார். ஆனாலும், மறந்தும் அதிமுக குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ விமர்சிப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். தவெக மாநாட்டிற்குப் பிறகு விஜய் தரப்பை அதிமுக தலைவர்கள் விமர்சித்து வந்தாலும் ஒரு சாஃப்ட் டோனையே மெயின்டைன் செய்து வருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
எடப்பாடி திட்டம்
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால்தான் விஜய், அதிமுக கூட்டணிக்கு வரவில்லை எனவும் தேவைப்பட்டால் தேர்தலுக்குப் பிறகு கூட அதிமுக தவெக கூட்டணி ஏற்படும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் அது நினைத்த பலனைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு செல்லும் நிலையில் பாஜக எதிர்ப்பு வாக்குகளும் இருக்கின்றன.
எடப்பாடி விஜய்
அது திமுகவுக்குச் சென்று விடாமல் தமிழக வெற்றி கழகத்திற்குச் செல்ல அந்தக் கட்சி தனி அணி அமைத்துப் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும் என்பது விஜய்யின் எண்ணம். விஜய்க்கு 20 முதல் 30 சதவீத வாக்குகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் கிடைக்கும் என அவர் தரப்பு ஆய்வு முடிவுகள் சொல்லி வரும் நிலையில் 5 முதல் 10 எம்எல்ஏக்கள் சீட்டாவது கிடைக்கும் என்பது விஜய்யின் நம்பிக்கை. ஒருவேளை தமிழகத்தில் 2026 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் தனக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பது விஜய்யின் எண்ணம்.
2026 தேர்தல்
ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் கணிசமான தொகுதிகளை வென்றால் கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. அதன் காரணமாகவே திமுகவையும் பாஜகவையும் விமர்சிக்கும் அளவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் இதுவரை அதிமுகவையோ, எடப்பாடி பழனிசாமியையோ ஒரு சதவீதம் கூட விமர்சிக்கவில்லை எனச் சொல்கின்றனர் அவர் தரப்பினர்.












Click it and Unblock the Notifications