திருவண்ணாமலையில் வியக்க வைத்த அதிமுக.. போனியாகாத விசில்!
சென்னை: அதிமுக ஒட்டு மொத்தமாக எதிர்க்கட்சி அந்தஸ்து பெறாவிட்டாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தாக 5 தொகுதிகளை அள்ளியுள்ளது. மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் 5 இடங்களில் அதிமுகவே வென்றுள்ளது.. அதிமுகவிற்கு பல மாவட்டங்கள் அதிர்ச்சி கொடுத்த போதும் திருவண்ணாமலையில் திமுக, தவெகவைவிட அதிக இடங்களில் வென்றது கவனிக்க வைத்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. விஜய்யின் தவெக சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வென்று பிரம்மிக்க வைத்தது. ஆளும் திமுக படு தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுகவும் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

8-இல் 5ஐ தட்டி தூக்கிய அதிமுக
அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக தனது கோட்டையாக கருதிய மேற்கு மண்டலத்திலும் இந்த முறை ஆட்டம் கண்டது. அதேநேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக அசத்தியுள்ளது. மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் திமுக வென்றுள்ளது. ஒரு தொகுதியில் தவெக வெற்றி பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், ஆரணி, கலசபாக்கம், செங்கம், செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள உள்ளன.
செங்கம் தொகுதி - அதிமுக வெற்றி
செங்கம் தொகுதியில் அதிமுக தன் வசப்படுத்தியது. அதிமுக வேட்பாளர் வேலு 87,802 வாக்குகள் பெற்று 13,278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் பாரதிதாசன் 74,524 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக வேட்பாளர் கிரி 70,346 வாக்குகள் பெற்று 3 ஆம் இடம் பிடித்தார்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி - அதிமுக வெற்றி
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 90,503 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கு. பிச்சாண்டியை விட 30,465 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் ராஜா 59,130 வாக்குகள் பெற்று 3 ஆம் இடம் பிடித்தார்.
கலசபாக்கம் தொகுதி - அதிமுக வெற்றி
கலசபாக்கம் தொகுதியையும் அதிமுக தன் வசப்படுத்தியுள்ளது. அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 89,629 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சரவணன் 62,889 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், தவெக ஏழுமலை 51,666 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
ஆரணி தொகுதி - அதிமுக வெற்றி
ஆரணி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் 76,735 வாக்குகள் பெற்று அதிமுகவின் ஜெயசுதா வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் திமுகவின் மகாலாட்சுமி கோவர்த்தனன் 71,104 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளர் டி வெங்கடேஷ்குமார் 70,857 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
செய்யாறு தொகுதி - அதிமுக வெற்றி
செய்யாறு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சா் முக்கூர் என். சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். 86,680 வாக்குகள் பெற்று 21,081 தவெக துளசி மோகனை வீழ்த்தினார். திமுக சார்பில் போட்டியிட்ட ஜோதி 59,894 வாக்குகள் பெற்று 3 ஆம் இடம் பிடித்தார்.
திருவண்ணாமலை - திமுக வெற்றி
திருவண்ணாமலையில் திமுக அமைச்சர் எ.வ வேலூ 88,273 வாக்குகள் பெற்று 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய்யின் தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தை வீழ்த்தினார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஏழுமலை 34,280 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தது.
வந்தவாசி - திமுக வெற்றி
வந்தவாசி தொகுதியையும் திமுக தட்டி தூக்கியுள்ளது. திமுக வேட்பாளர் அம்பேத்குமார் 63,805 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக ராணி 3,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். விஜய்யின் தவெக 58,174 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
போளூர் தொகுதி - தவெக வெற்றி
போளூர் தொகுதியில் விஜய்யின் தவெக வேட்பாளர் அபிஷேக் வெற்றி வாகை சூடியுள்ளார். மொத்தம் 97,961 வாக்குகள் பெற்று வெறும் 227 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சரவணனை வீழ்த்தியுள்ளார். பாமக சார்பில் பாஸ்கரன் 61,444 வாக்குகள் பெற்று 3 ஆம் இடம் பிடித்தார்.















Click it and Unblock the Notifications