அஸ்திவாரம் போடும் முன்பே.. எல்லாம் முடிஞ்சிடுச்சே.. எடப்பாடிக்கு போன வார்னிங் மெசேஜ்.. அப்போ அதிமுக?
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்கள் அதிமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2019, 2015 லோக்சபா தேர்தல்களில் அதிமுக தென் மண்டலத்தில் கடுமையான சரிவை சந்தித்தது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் இல்லாத காரணத்தால் கடுமையான சரிவை எடப்பாடி சந்தித்தார். அதை மேலும் உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் தென் மண்டல அரசியலில் தற்போது நடந்துள்ளது.

1. எடப்பாடி - டிடிவி தினகரன் உரசல் - பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் சமீபத்தில் எடப்பாடியை தாக்கி பேசினார். அதில் , தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.
2. முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு தென் மண்டலத்திலும், டெல்டாவில் கடுமையான முக்குலத்தோர் ஆதரவு உள்ள நிலையில் எடப்பாடி அவருடன் தொடர்ந்து மோதி வருவது தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய பின்னடைவை கொடுக்கும்.
3. அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தென்மாவட்டங்களில் அதிமுகவின் இஸ்லாமிய முகம்களில் முக்கியமானவராக இருந்தவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா இஸ்லாமியர்கள் இடையே அரசியல் கடந்தும் கூட பெரிய மதிப்பையும் பெற்று இருந்தார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார். இவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
4. ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பது இல்லை. அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இப்போது இஸ்லாமியர்கள் வாக்குகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
5. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இவரின் வெளியேற்றமும் தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய சவுக்கடியாக இருக்கும்.
6. இப்படி கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடந்த தொடர் சம்பவங்கள் அதிமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.












Click it and Unblock the Notifications