காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள்.. அதிமுகவை கூடுதலாக நெருக்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி கணக்கு என்ன?
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியை விட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக மும்முரமாக உள்ளது. இதுதொடர்பாக பாஜக மேலிடம் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ராஜ்ய சபா தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளுக்கு முன்பாகவே திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டை திமுக ஒதுக்கி இருக்கிறது. இதனால் திமுக தலைமை உற்சாகம் அடைந்துள்ளது.

ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நிலைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீட்டை திமுக முடித்துவிட்டது. இதனால் அடுத்தக் கட்டமாக விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்தால், தேர்தலுக்கு தயாராகிவிடலாம் என்று கணக்கிட்டுள்ளது.
தற்போது திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு நிறைவடைந்ததால், அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் திமுக தொகுதி பங்கீட்டுக்கு முன்பாக அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து அறிவித்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். அது தவிடுபொடியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அதனை விடவும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் மட்டுமே வென்றிருந்தது. இதனால் 25 தொகுதிகள் வரை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜக 35 தொகுதிகளுக்கு கீழ் இறங்க மறுத்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜகவே தொகுதி பங்கீடு செய்யும் என்பதால், சுமார் 55 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதனை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இதனால் பலரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications