கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? விர்ரென உயர்ந்த விமான கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் திங்கள்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து அன்றைய தினம் பிறந்ததையொட்டி வீடுகளிலும் தேவாலயங்களிலும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அவரது பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்களை அமைப்பது வழக்கம்.

பலர் கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.
இதனால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அது போல் பேருந்து போக்குவரத்தும் எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு பேருந்துகளில் முன்பதிவுகள் முடிந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் விமானங்களிலாவது சொந்த ஊருக்கு செல்ல மக்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கும் கேரளாவுக்கும் செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உதாரணமாக சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல ரூ 2800 லிருந்து 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அது போல் சென்னையிலிருந்து கொச்சி வரை விமானத்தில் செல்ல பழைய கட்டணம் ரூ 3 ஆயிரமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ரூ 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அது போல் சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல இதுவரை விமான கட்டணமாக ரூ 3315 என வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரூ 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அது போல் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல ரூ 4 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் தற்போது 14 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அது போல் சென்னை- மதுரை இடையே ரூ 3314 கட்டணமாக இருந்த நிலையில் ரூ 10,192 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து திருச்சி செல்ல ரூ 2579 விமான கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ 9,555 ஆக உயர்ந்துள்ளது. இது பயணிகளுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது. எனினும் பலர் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் அதிகபடியான கட்டணத்தை செலுத்தி விமானங்களில் செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications