விஜய் மீது விமர்சனம்.. அஜித் ரசிகர்களுக்கு வந்துச்சே கோபம்! ரணகளமாகும் ட்விட்டர் -திடீரென என்னாச்சு?
சென்னை: அண்மை காலங்களாக தமிழ் சினிமாவை கடுமையாக கிண்டல் செய்து வந்த தெலுங்கு சினிமா ரசிகர்கள், வாரிசு திரைப்பட போஸ்டர் வெளியீட்டை தொடர்ந்து நடிகர் விஜய்யை கிண்டல் செய்ததால் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.
தெலுங்கு சினிமா என்றாலே லாஜிக் இல்லாத மசாலா படம்தான் என்று இருந்த பார்வை ராஜமௌலி வருகைக்குப் பின் மாற்றி அமைக்கப்பட்டது.
அவர் எடுத்த மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவை தாண்டி கவனம் பெற்றன. இதனையடுத்து பாகுபலி 2 பாகங்களும், ஆர்ஆர்ஆர் திரைப்படமும் இந்திய திரையுலகில் அமைத்துக் கொடுத்த இடம் பெரிது.

தெலுங்கு ரசிகர்கள்
இதுதவிர புஷ்பா திரைப்படமும் வசூல் ரிதீயாக வெற்றி பெற்று, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த வெற்றிகளால் பாலிவுட், கோலிவுட்டை டோலிவுட் தூக்கி சாப்பிட்டதாக கூறி, தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதற்கேற்றாற் போல் சமீபத்தில் வெளியான வலிமை, அண்ணாத்த, பீஸ்ட் உள்ளிட்ட தமிழ் படங்களும் தோல்வியை சந்தித்ததால், தமிழ் மொழியில் பான் இந்தியா படங்கள் வராதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

விக்ரம் வெற்றி
இந்த ஆதங்க கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிற மொழி படங்களின் வெற்றியை கண்டு தமிழ் சினிமா கவலைப்படத் தேவையில்லை என்று இயக்குநர் மணிரத்னம் கூறியிருந்தார். இந்த பிரச்னையை தீர்க்க லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம், வசூல் சாதனைகளை வாரிக் குவித்து பான் இந்தியா படமாக உருப்பெற்றது.

பொன்னியின் செல்வன்
ஆனாலும், விக்ரம் திரைப்படம் பான் இந்தியா படமே அல்ல என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பாகுபலி போன்ற ஒரு படத்தை உருவாக்கவே முடியாது என ஆணித்தரமாக பலரும் பதிவிட்டிருந்தனர். ஆனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அதனை முறியடிக்கும் என பதிலடி கொடுத்த வந்தனர். ஆனால் தொடர்ந்து டோலிவுட் ரசிகர்கள் விமர்சனம் வைத்துவரும் நிலையில், அது பொன்னியின் செல்வன் டீசரிலும் எதிரொலிக்க தொடங்கியது. டீசரில் காட்டப்பட்ட கதைக்களமும், காட்சிகளும் பாகுபலி போன்றே இருப்பதாக கூறி வந்தனர்.

விஜய் மீது விமர்சனம்
தமிழ் சினிமாவை கிண்டல் செய்துவந்தவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் பதிலடி கொடுக்க கொடுக்க தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தமிழ் நடிகர்களை கிண்டல் செய்யும் இடத்திற்கு நகர்ந்தனர் தெலுங்கு ரசிகர்கள். அதிலும் நடிகர் விஜய்யை குறிப்பிட்டு, ‘அவருக்கு நடிக்க தெரியாது' என்றெல்லாம் கிண்டல் செய்தனர். இந்த சமயத்தில் தெலுங்கில் இருந்து மட்டும் நடிகர் விஜய் 12 ரீமேக் படங்களில் நடித்து இருப்பதாகவும், அவருக்கு நடனம் என்றாலே என்னவென்று தெரியாது எனக் கூறத் தொடங்கினர்.

ஆட்டத்தில் இறங்கி அஜித் ரசிகர்கள்
இதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தாலும், அவர்களை மிஞ்சும் விதமாக அஜித் ரசிகர்களே தெலுங்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 12 ரீமேக் படங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், விஜய் படங்களை வைத்து தெலுங்கு நடிகர்கள் 14 ரீமேக் படங்களில் நடித்திருப்பதாக பதிலடி கொடுத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

விஜய்யை புகழ்ந்த அஜித் ரசிகர்கள்
அதுமட்டுமின்றி விஜயின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸைக் குறிப்பிட்டு இது போன்ற ஆட இந்தியாவிலேயே ஆள் இல்லை என்றும் புகழ்ந்து வருகின்றனர். வழக்கமாக சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்களே மாறிமாறி சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில், தெலுங்கு ரசிகர்களுக்கு எதிராக இருதரப்பும் ஒன்றாக சமூகவலைதளங்களில் களமிறங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
