Code Word Accepted.. ‘இரட்டை’ விரலைக் காட்டிய அஜித் குமார்! இது போதும் தல..கொண்டாடும் அதிமுக!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் வாக்களித்தார். வாக்குப்பதிவின்போது அவர் இரட்டை விரலை காட்டிய நிலையில் தங்களுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் அதிமுகவினர். கடந்த தேர்தலின் போது விஜய் கருப்பு சிகப்பு சைக்கிளில் சென்றதால் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலையிலேயே வருகை தந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்தார்.

பின்னர் மற்ற வாக்காளர்களுடன் இணைந்து வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. எப்போதும் போல எளிமையான முறையில் வாக்களிக்க வந்த அவர், எந்தவித சிறப்புச் சலுகைகளும் இன்றி பொதுமக்களுடன் காத்திருந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
வாக்குச்சாவடிக்கு வெள்ளை நிற உடையில் வந்திருந்த அஜித், அடையாள ஆவணங்களை சரிபார்த்த பிறகு வாக்களித்தார். அவர் வருவதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாலையிலேயே அங்கு திரண்டிருந்தனர். பாதுகாப்பு கருதி போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கூடுதல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாக்களித்த பிறகு வெளியே வந்த அஜித், அங்கு காத்திருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி கையை அசைத்தபோது, இரட்டை விரல் (Victory sign) காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு அதிமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு, அஜித் தங்களுக்கே ஆதரவு தெரிவித்ததாக கூறி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. இதுபோன்ற சம்பவம் கடந்த தேர்தலிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது நடிகர் விஜய் கருப்பு-சிகப்பு நிற சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்றதை அடிப்படையாக கொண்டு, அவர் திராவிட முன்னேற்ற கழகம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியிருந்தன.
பின்னர் அது வெறும் ஊகமாகவே இருந்தது என்பது தெளிவானது. பொதுவாக தேர்தல் நாட்களில் திரைப்பிரபலங்கள் வாக்களிக்கும் தருணங்கள் சமூக வலைதளங்களில் விரைவாக வைரலாகி, அதனைச் சுற்றி பல்வேறு அரசியல் சர்ச்சையாக உருவாவது வழக்கமாகி வருகிறது.
ஆனால் நடிகர்கள் அல்லது பிரபலங்கள் எந்தவித அரசியல் கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தாலும், அவர்களின் சைகைகள் அல்லது உடை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அரசியல் ஆதரவு குறித்து ஊகங்கள் பரவுவது புதிய விஷயம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அது போலியானது எனவும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications