தக் லைப் தலைவா.. பிரித்து மேய்ந்த பிடிஆர்! டிவி நேரலை என்று பாராமல் சம்பவம் - அணிவகுக்கும் மீம்ஸ்கள்
சென்னை: மக்களுக்கான இலவச திட்டங்கள் தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி நடத்திய ஊடகத்தில் மத்திய அரசின் கொள்கைகளை நாங்கள் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த கருத்துக்களை பகிர்ந்து மீம்களை அள்ளி வீசி வருகின்றனர்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது என்றும், அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இந்த கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்கள், புதிய விரைவு சாலைகளை, புதிய விமான நிலையங்களை, பாதுகாப்பு பகுதிகளை கட்டமைக்க மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் தோற்கடிக்க வேண்டும்." என்றார்.

இலவசங்களுக்கு எதிரான வழக்கு
இந்த நிலையில், இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

தலைமை நீதிபதி கருத்து
இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான கேள்வியும் உள்ளது." என்றார்.

தொலைக்காட்சி விவாதம்
இந்த நிலையில் நேற்று இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சியில், இலவச திட்டங்கள் தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது இலவசங்கள் திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை முன்வைத்து நெறியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

பிடிஆர் பேச்சு
இதற்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், "எதன் அடிப்படையில் நீங்கள் சொல்வதை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்? அரசியலமைப்பின் அடிப்படையிலா? அல்லது இதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்களா? அல்லது நீங்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி முடித்துள்ளீர்களா? அல்லது நோபல் பரிசைதான் வைத்திருக்கிறீர்களா? எங்களை விட சிறந்தவர்கள் என்று சொல்ல உங்களிடம் ஏதாவது இருக்கா? பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று கடனை குறைத்து, வருமானத்தை உயர்த்தி, வேலைவாய்ப்பை பெருக்கி சிறப்பான சாதனைகள் ஏதேனும் செய்துள்ளீர்களா? இதில் எதுவும் உண்மை இல்லாதபோது நாங்கள் ஏன் நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

சமூக வலைதளங்கள்
பிடிஆரின் இந்த பேச்சை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து அவரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். பிடிஆர் பேசுவதற்கு முன்பாக அவர் தனது பின் தலையில் கைவைப்பார். நேரலையில் இவ்வாறு செய்வதா என்று சிலர் விமர்சனங்களை முன்வைக்க, அதையும் மீம் டெம்பிளேட்டாக்கி பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications