அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு! நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கோரும் காங்கிரஸ்!
அதானி குழுமம் மீதான புகாரை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை.
சென்னை: அதானி மீதான குற்றச்சாட்டை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு என்ன பயம்? அவருக்கு கீழ் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை இல்லையா? என வினவியுள்ளது.
காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரும், முன்னாள் அமைச்சருமான உத்தம் குமார் ரெட்டி இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது;
''பல ஆண்டுகளாக அமலாக்கப்பிரிவு, சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளைத் தவறாகப் பயன்படுத்தி, தனது கருத்தியல் எதிரிகளை மிரட்டவும், தனது நிதி நலன்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்களைத் தண்டிக்கவும் பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார்.

1992 ஆம் ஆண்டில், ஹர்ஷத் மேத்தா வழக்கை விசாரிக்க ஒரு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது, 2001 ஆம் ஆண்டில், கேதன் பரேக் வழக்கை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரித்தது. அன்றைய பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய இருவரும், கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களைப் பாதித்த ஊழல்களை விசாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு என்ன பயம்? அவருக்கு கீழ் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை இல்லையா?
இந்த மோசடி நடந்து கொண்டிருக்கும் போது செபி என்ன செய்து கொண்டிருந்தது? இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு, செயற்கையாக உயர்த்தப்பட்ட விலைகளால் ஏமாற்றப்பட்டு, அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்த லட்சக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்களை நிதி ரீதியாகப் பாதிப்படையச் செய்துள்ளது.
விமான நிலையங்களைக் கையாளுவதில் அனுபவமே இல்லாத அதானி குழுமத்துக்கு ,கடந்த 2019 ஆம் ஆண்டில், அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், குவகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களைக் கையாளும் உரிமம் வழங்கப்பட்டது,
அதானி குழுமம் இன்று 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களைக் கையாளுகிறது, குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துடன் கூடுதலாக, தாம்ரா துறைமுகம், ஒடிசா (2015), காட்டுப்பள்ளி துறைமுகம், தமிழ்நாடு (2018), கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகம், ஆந்திரப் பிரதேசம் (2020), கங்காவரம் துறைமுகம், ஆந்திரப் பிரதேசம் (2020) ஆகியவை அடங்கும்.
வெளிநாட்டுப் போலி நிறுவனங்களால் பணமோசடி செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு நிறுவனத்தை-தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதா? என்ற கேள்வி எழுகிறது.

பிரதமர் மோடியுடன் பல வெளிநாட்டுப் பயணங்களில் கவுதம் அதானி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 4-6 2017 இல் அவர் இஸ்ரேலுக்குச் சென்ற பிறகு, முன் அனுபவம் இல்லாத போதிலும், ட்ரோன்கள், எலக்ட்ரானிக்ஸ், சிறிய ஆயுதங்கள் மற்றும் விமானப் பராமரிப்பு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளுடன் இந்தியா-இஸ்ரேல் பாதுகாப்பு உறவில் அவருக்கு லாபகரமான பங்கு வழங்கப்பட்டது.
மோடி பிரதமராக பதவியேற்ற 2014 ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த கௌதம் அதானி, 2022-ல் இரண்டாவது இடத்திற்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவு தான் காரணம் என்பதை எவராவது மறுக்க முடியுமா ?
மோடி அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிஏஜி, சிபிஐ போன்ற அனைத்து அரசு நிறுவனங்களின் கைகளையும் கட்டிப் போட்டிருக்கலாம். ஆனால் உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதையே அதானியின் வீழ்ச்சி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை, அமலாக்கத்துறையோ, சிபிஐ அமைப்போ முயன்றாலும் மறைக்க முடியாது. இது ஆரம்பம் தான்... பாஜகவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போவதை யாராலும் தடுக்க முடியாது.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications