விஜய் உடன் கூட்டணி இல்லையா? 2026 தேர்தலிலும் அதிமுக கூட்டணி தானாம்.. சொல்வது தேமுதிக சுதீஷ்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலிலும், எதிர்வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது பற்றி பரிசீலனை செய்வோம் என்றும் சுதீஷ் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார். முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய சுதீஷ், “தே.மு.தி.க தொடங்கப்பட்டு 20-வது ஆண்டு எட்டிபுள்ளதை முன்னிட்டு கட்சியில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தேமுதிக நான்கு சட்டமன்றத் தேர்தல், நான்கு பாராளுமன்றத் தேர்தல், மூன்று உள்ளாட்சித் தேர்தல் ஆகியவவற்றைச் சந்தித்து வலுவான கட்சியாக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும். எதிர்வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.
விசிக தலைவர் திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் அது குறித்து ஆலோசனை செய்யப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர். ஆனால் சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33,000 கோடி தொழில் முதலீட்டை திரட்டினார்.
சிறுவர்களுக்கான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சிறு கிராமங்களில் கூட கஞ்சா விற்பனை உள்ளது. இதை போல் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மேற்கு வங்க மாநிலத்தில் இயற்றியது போல் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தற்போது அரசியல் களத்திற்கு வந்துள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரும் விவாதமாகி இருக்கிறது. ஆரம்ப காலங்களில் விஜய்யுடன் நடித்து அவரை வளர்த்து விட்டவர் விஜயகாந்த். விஜய் அண்மையில் கூட பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்தார்.
எனவே, தேமுதிக உடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான், 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் எனக் கூறி இருக்கிறார் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ்.












Click it and Unblock the Notifications