ஆளுநர் விவகாரத்தில் திமுகதான் சூப்பர்! தவெக சமரசம்! கூட்டணியில் இருந்துகிட்டே ஷாநவாஸ் விமர்சனம்
சென்னை: ஆளுநர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை முந்தைய திமுக அரசு நிலைநாட்டியது. ஆனால் தற்போதைய தவெக அரசு சமரசம் செய்துவிட்டது என விசிக முதன்மை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது. பாஜகவின் பி டீம் ஆட்சி நடத்துகிறது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தேர்தல் நேரத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் தவெக ஆட்சியாளர்கள் மாற்றினர்.
ஆனால் தேர்தல் ஆணையம் நியமித்த தலைமைச் செயலாளருக்கு பணி நீட்டிப்பு அளித்துள்ள சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாரையும் மாற்றிய தவெக அரசு மாநில நிர்வாகத்தை நடத்தும் முக்கிய இடத்தில் இருக்கும் தலைமைச் செயலாளரை மாற்றாதது ஏன்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது போல் அவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 'தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக.
இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது ஆர்.என்.ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும்.
ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக அமைச்சரவையில் விசிக இணைந்துள்ளது. அமைச்சராக வன்னியரசு இருந்து வருகிறார். இதற்காக விசிகவை திமுகவினர் கடுமையாக கொச்சையாக விமர்சித்திருந்தனர். அது போல் பனையூர் பாபுவை திமுகவில் சேர்த்ததை திருமாவளவன் விமர்சித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் விசிகவின் ஷாநவாஸ் திமுகவை பாராட்டிவிட்டு, கூட்டணியில் இருக்கும் தவெகவை விமர்சித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது சட்டசபையில் ஆளுநர் உரையின் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதற்கு அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனால் ஒவ்வொரு முறையும் ஆளுநர் உரையின் போது அவர் உரையை முழுமையாக படிக்காமல் வெளியேறிவிடுவார். இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றதும் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவது ஜன கண மன, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து "இது ஆளுநர் மாளிகை நடத்தும் நிகழ்ச்சி என்பதால் அவ்வாறு பாடப்பட்டது, இனி வரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாது " என ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்திருந்தார். ஆனால் தற்காலிக சபாநாயகர் நியமனத்தின்போதும் மற்ற அமைச்சர்கள் பதவியேற்பின்போதும் இதுதான் நடந்தது.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பிறகு தேசிய கீதமும் பாடப்பட்டது. ஆனால் ஆளுநர் கலந்து கொள்ளும் அரசு, பல்கலைக்கழக விழாக்களில் வந்தே மாதரம், தேசிய கீதம், அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications