அலறிய ஆம்புலன்ஸ்.. எகிறிய எடப்பாடி! நாங்க கண்டிக்கவே இல்லை.. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் விளக்கம்!
சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதால் கோபமடைந்து பேசி இருந்தார். இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமியை கண்டிப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. இந்த நிலையில் தங்கள் சங்கத்தின் சார்பில் கண்டன அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கோவையில் தொடங்கிய சுற்றுப்பயணம் பல்வேறு மாவட்டங்களை கடந்து தற்போது வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி
அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று பிரச்சாரம் நடந்த இடத்தின் குறுக்கே வந்தது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி," பல்வேறு கூட்டங்களில் நான் கவனித்து வருகிறேன். நடுவில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் இதுபோன்று வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவரை நாங்கள் நோயாளி ஆக்கி அதே ஆம்புலன்ஸில் அனுப்பி விடுவோம்" என பேசி இருந்தார்.
ஆம்புலன்ஸ் விவகாரம்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளியானது. இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் திருச்சி என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில்," நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம்
நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். எடப்பாடி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறப்பட்டிருந்தது.
கண்டன அறிக்கை
இந்நிலையில், இந்த நிலையில் தங்கள் சங்கத்தின் சார்பில் கண்டன அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதில்," இன்றைய தினம் (19.08.2025) தமிழக ஊடகங்களில் எங்களது சங்கத்தின் சார்பாக நேற்று வேலூரில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 108 ஓட்டுநரை வழி மறித்து அவரை மிரட்டும் தோணியில் பேசியதாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லையெனில் நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற பெயரில் கண்டன அறிக்கையானது சங்கத் தலைவரின் பெயரையும், எங்களது சங்க லெட்டர் பேடை தவறாகவும், அவதூறாகவும் பயன்படுத்தி கண்டன அறிக்கையினை வெளியிட்டு உள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் விளக்கம்
மேற்கண்டபடி எந்தவொரு கண்டன அறிக்கையையும் எங்களது சங்கத்தின் சார்பாகவோ, தலைவரோ யாதொரு ஊடகத்திற்கும் அறிக்கையோ, பேட்டியோ கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் எங்களது சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்களை யாரோ வழங்கியுள்ளனர். இந்த கண்டன அறிக்கைக்கும் எங்களது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. எங்களது சங்கமானது தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படும் சங்கமாகும். இது ஒரு அரசியல் சாராத இயக்கம் ஆகும்.
சட்ட நடவடிக்கை
ஆகவே ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இந்த செய்தியை ஒளிபரப்பு செய்ய வேண்டுமெனவும், அதனை உடனே நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த தவறான செயல்களை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்." என அந்த சங்கத்தின் மாநில செயலாளர் முகமது இலியாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications