“ஜனநாயகன் படத்தை காப்பாற்ற துடிக்கும் கூட்டத்தை விட.. இந்த கூட்டம் அறிவார்ந்தது!”- இயக்குநர் அமீர்
சென்னை: சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த இயக்குநர் அமீர், ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற நினைக்கும் கூட்டத்தை விட.. ஜனநாயகத்தை காப்பாற்ற நினைக்கும் கூட்டம் அறிவார்ந்தது என பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. குறிப்பாக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் சூடுபிடித்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திரைத்துறையினர் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.

இதில், பங்கேற்றிருந்த இயக்குநர் அமீர் பேசியதாவது, "ஜனநாயகத்தை காப்பாற்ற சிறு கூட்டம் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.. ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற பெரும் கூட்டத்தினர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கூட்டம்.. இதைவிட பெரிய கூட்டமாக இருக்கலாம். ஆனால், இவர்களை விட அக்கூட்டம் அறிவார்ந்தவர்களாக இருக்காது" என்று பேசியிருக்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிராக இருப்பதாக தவெக கூறுகிறது. ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக போராடினால், மாணவர்களை தமிழக போலீசார் தேடி தேடி கைது செய்கின்றனர். இந்த முரண்பாடு ஏன்? நீட் போராட்டத்தை ஏன் தமிழக அரசு ஒடுக்குகிறது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது.
திரைப்படத்தை பார்த்து தமிழக அமைச்சர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றனர். ஆனால், அவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை. மட்டுமல்லாது தவெக தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் கூட, இந்த போராட்டம் குறித்து மிகவும் தாமதமாகவே பேசியிருந்தார். ஏன் இந்த அரசு நீட் எதிர்ப்பு விஷயத்தை தீவிரமாக கையில் எடுக்கவில்லை? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் இயக்குநர் அமீர் பேசியிருக்கிறார்.
ஆனால், நீட் எதிர்ப்பு போராட்டத்தை தவெக எதிர்ப்பு போராட்டமாக திமுக மாற்றுவதாக.. தவெகவினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். நீட் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? சரி ஜனநாயகன் திரைப்படத்தை பார்ப்பதால் நீட் எதிர்ப்பு போராட்டம் நீர்த்து போய்விடுமா? என்றும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
அதேபோல ராஜரத்தினம் ஸ்டேடிம் கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்த நடிகை ரேவதி, மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடி வருகிறார்கள் என்றும், பேப்பர் லீக் பெரிய பிரச்சனை என்றும், கல்விதான் போராட்டத்திற்கு அடிப்படையாக இருக்கிறது என்றும் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
