அதிமுக விதிகளை திருத்தியது சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி புகார்
இரட்டை இலைச்சின்னத்தை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அதிமுக விதிகளை திருத்தியது சட்ட விரோதம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். தன்னையும், அன்வர்ராஜாவையும் நீக்கியது சட்டவிரோதம் என அவர் பேட்டி அளித்துள்ளார்.

புகழேந்தியின் அரசியல் பயணம்
அதிமுகவில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தபோது கர்நாடக மாநில அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் புகழேந்தி. சசிகலா தரப்பிடம் மிகவும் நெருக்கமாக, விசுவாசமாக, செல்வாக்காக இருந்தவர் புகழேந்தி. அமமுக தொடங்கப்பட்டபோது முக்கிய புள்ளியாக செயல்பட்டார். அதிமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைத்து வந்தார். டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அமமுகவிலிருந்து விலகினார். பின்னர் திடீரென அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் செய்தி தொடர்பாளராக செல்வாக்காக இருந்தார்.
'எங்கள் தயவால் தான் அதிமுக இத்தனை இடங்களை வெல்ல முடிந்தது' என பாமகவின் அன்புமணி ராமதாஸ் சொன்னதற்கு புகழேந்தி பதிலடி கொடுத்தார். இதற்கு மறுநாள் , 'கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக' அவர் மீது நடவடிக்கை எடுத்து அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார். எடப்பாடி மீது புகார் கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசமி, ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.

டெல்லி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த புகழேந்தி
ஒதுங்கியிருந்த புகழேந்தி அதன் பின்னர் கட்சி எதிலும் சேராமல், சசிகலாவைக்கூட சந்திக்காமல் ஒதுங்கி இருந்துவருகிறார் புகழேந்தி. ஊடக விவாதங்களில் கலந்துக்கொள்ளும் அவர் அதிமுக ஜெயலலிதா காலத்தில் இருந்த மரியாதையை திரும்பப்பெற வேண்டும் என பேசி வருகிறார். இன்று அதிமுக செயற்குழுவில் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் நிலைப்பாட்டை எதிர்த்து புகழேந்தி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்த பின்னர், அது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

விதிகளை திருத்தியது சட்ட விரோதம்
" அ.தி.மு.க.வின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது. அதிமுக இரண்டாக பிரிந்த போது தேர்தல் ஆணையம் மதுசூதனன் தலைமையிலான அணியில் அதிக எம்.பி.க்கள் இருந்த காரணத்தை வைத்து அவர் தலைமையிலான அணி அதிமுக பெயரை பயன்படுத்த அனுமதி வழங்கியது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விருப்ப மனு பெறப்பட்டது, இதற்காக தலா 15 ஆயிரம் ரூபாய் என 20 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்யப்பட்டது. ஆனால் எடப்பாடி உள்ளிட்டோர் தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.

கட்சியிலிருந்து நீக்கியது சட்ட விரோதம்
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். என்னையும், அன்வர் ராஜா உள்ளிட்டோரை வேண்டுமென்றே அதிமுகவில் இருந்து நீக்கினர். எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரவில்லை, ஆனால் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். பயன்படுத்த கூடாது என்று தான் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதிமுக கட்சியை வைத்து பயன்படுத்தி எடப்பாடி கொள்ளையடிக்கிறார், கட்சிக்கு களங்கம் விளைவித்துள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சசிகலா அதிமுக கட்சிக்குள் வர வேண்டும், ஆனால் கட்சி தலைமை பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்பதை தொண்டர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

நல்லாட்சி செய்யும் ஸ்டாலின்
தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வரும் முதல்வர் ஸ்டாலின் அரசு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications