"தலைமையேற்க வாருங்கள்.." சசிகலாவிடம் நேரடியாக சென்ற அதிமுக நிர்வாகிகள்! அதிர்ச்சியில் இபிஎஸ்- ஓபிஎஸ்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுகவில் தலைமை குறித்த சந்தேகம் மற்றும் விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள், கடந்த சனிக்கிழமை, பிப் 21ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இதில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான படுதோல்வி அடைந்தது. கோவை உள்ளிட்ட எந்தவொரு மாநகராட்சியையும் அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. அதேபோல 138 நகராட்சிகளில் வெறும் மூன்றையும், 490 பேரூராட்சிகளில் 15ஐ மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது.

அதிமுக படுதோல்வி
வார்டுகளில் வாரியாக கூட அதிமுக மிகக் குறைவான இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மாநகராட்சிகளில் 164 வார்டுகள், நகராட்சிகளில் 638 வார்டுகள், பேரூராட்சிகளில் 1206 வார்டுகளில் மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. கடந்த ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக இதேபோல படுதோல்வியைச் சந்தித்து இருந்தது.

மீண்டும் தலைமை சர்ச்சை
இருப்பினும், இந்த முறை பொங்கல் பரிசுப் பொருட்கள் விவகாரம், நீட் விலக்கு உள்ளிட்டவை குறித்து தீவிர பிரசாரம் செய்த அதிமுக, கணிசமான இடங்களில் வெல்ல முடியும் என நம்பியது. இருப்பினும், அக்கட்சி ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே மீண்டும் படுதோல்வியைச் சந்தித்து உள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் தலைமை குறித்த பேச்சு அங்குக் கிளம்பியுள்ளது.

சசிகலா
ஏற்கனவே, கடந்த மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து ஜனவரியில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போதே அவர் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், "பல்வேறு" இடங்களில் இருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார்.

அதிமுக
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, அதிமுகவின் மூத்த தலைவர்கள் தொடங்கி பலரும் சசிகலாவை நேரில் சந்தித்து தலைமை ஏற்க அழைத்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். ஆனால், சில ஆண்டுகளில் அதிமுகவின் நிலை தலைகீழாக மாறி இருந்தது. சசிகலாவை ஒருபோதும் மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் இப்போதைய தலைமை மிக உறுதியாக இருந்தது.

ஆடியோ அரசியல்
சசிகலா இதைப் பற்றி பெரியளவில் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் கூட, தொடர்ந்து கோயில்களுக்கு ஆன்மிக பயணம் சென்று தொண்டர்களைச் சந்தித்தே வந்தார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், சசிகலா உடன் அதிமுக நிர்வாகிகள் பேசும் வீடியோக்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இதனால் ஆத்திரமடைந்த இன்றைய அதிமுக தலைமை சசிகலா உடன் பேசிய நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கியது.

தயக்கம் காட்டி தேனி நிர்வாகிகள்
ஆனால், இது சசிகலா உடன் அதிமுக நிர்வாகிகள் பேசுவதை நிறுத்தவில்லை. இப்படியே சுமார் 100க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளிகி இருந்தது. அதிமுகவில் பலரும் சசிகலா தலைமை ஏற்கத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. அப்போது சசிகலாவுக்கு எதிராக மாவட்ட அளவில் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து மாவட்டங்களும் அதிமுக தலைமை உத்தரவிட்ட போது, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-இன் தேனி மாவட்டத்தில் மட்டும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவில்லை எனத் தகவல் வெளியானது நினைவு கூறத்தக்கது.

போஸ்டர்கள்
இந்நிலையில், இப்போது மீண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமி, பதவி விலக வேண்டும் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டனர். அவர்கள் சசிகலாவை நேரில் சந்தித்த படங்கள் வெளியாகியுள்ளன.

நேரில் சந்திப்பு
அதாவது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளான திண்டிவனம் சேகர், ஷெரீப், தம்பி ஏழுமலை உள்ளிட்டோர் சென்னையில் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவிற்குத் தலைமையேற்று வழி நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சசிகலாவைத் தொடர்புகொண்டு பேசும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் அழுத்தம்
தொடர்ந்து அதிமுக தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், கட்சிக்குள் இன்றைய தலைமை மீதான எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியும் கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், கட்சியைச் சுயபரிசோதனைக்குப்படுத்தக் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications