விறுவிறு மெட்ரோ பணிகள்! அடுத்த 2 ஆண்டுகளுக்கு சென்னையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ கட்டுமான பணிகளால் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே நகரில் முக்கிய பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கும் நிலையில், டிராபிக்கை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் திட்டம் அதற்காகவே கொண்டு வரப்பட்டது.
நகரில் இரண்டு வழித்தடங்களில் இப்போது மெட்ரோ சேவை வழங்கப்பட்டு வருகிறது.. விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை மற்றும் சென்டரல் முதல் பரங்கிமலை ஆகிய வழித்தடங்களில் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சேவை வழங்கப்படுகிறது.

மெட்ரோ
மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நகரின் மற்ற பகுதிகளையும் மெட்ரோவுடன் இணைக்க இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டது. மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.. 2026 முதல் படிப்படியாக இரண்டாம்கட்ட மெட்ரோ சேவை அமலுக்கு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை போலீஸ்
இதற்கிடையே நகரின் முக்கிய பகுதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் சிஎம்ஆர்எல்-ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய வசதியாகப் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 01/02/2023 ம் தேதி முதல் ஒரு வாரக் காலத்திற்குச் சோதனை ஓட்டம் நன்குச் செயல்பட்டதால் சிஎம்ஆர்எல் கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் டி.டி.கே. சாலையை நோக்கி வழக்கம் போல் செல்லலாம். டிடிகே. சாலை சந்திப்பிலிருந்து ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து கோட்டூர்புரம் பாலத்தை நோக்கிச் செல்ல அடையார் கிளப் கேட் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி ஏ.பி.எம். அவென்யூ மற்றும் டர்ன் புல்ஸ் சாலை விரிவாக்கம் வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

சென்னை பேருந்துகள்
இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பு வழியாக அண்ணா சாலைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் டி.டி.கே.சாலை வழியாக வலதுபுறம் திரும்பி ஸ்ரீராம் நகர் தெற்கு தெரு, ஸ்ரீ ராம் நகர் மேற்கு தெரு, செனோடாப் 2வது லேன் மற்றும் ஐ.கேமுப்பனார் மேம்பால சர்வீஸ் சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

அடையாறு போட் கிளப்
அடையாறு போட் கிளப் கேட் சாலை, முதல் அவென்யூ போட் கிளப் சாலை மற்றும் போட் கிளப் சாலை ஆகியவை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சேமியர்ஸ் சாலையில் இருந்து போட் கிளப் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.. மேற்கண்ட வாகனங்கள் அடையாறு போட் கிளப் கேட் சாலை வழியாகச் செல்லலாம் (அம்மா நான்னா)

கவனம்
ஏபிஎம் அவென்யூ மற்றும் டர்ன் புல்ஸ் விரிவாக்கம் ஆகியவை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாகனங்கள் அடையார் போட் கிளப் சாலையிலிருந்து கோட்டூர்புரம் மேம்பாலத்தை நோக்கிச் செல்லலாம். வாகனங்கள் ஜி.கே. மூப்பனார் மேம்பால சர்வீஸ் சாலையிலிருந்து டர்ன் புல்ஸ் விரிவாக்கம் நோக்கிச் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து நேராக சேமியர்ஸ் சாலையில் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications