ஆளுநர் எதிர்ப்புக்கு நடுவே.. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி! தமிழக அரசு அதிரடி.. அரசாணை
சென்னை: ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்பையும் மீறி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அதற்கான அரசாணையும் பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதையடுத்து செந்தில் பாலாஜி கைதானதால் அவரது துறைகளை மாற்றி அமைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார். மேலும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

இதற்கு நேற்று ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புக்கொள்ளாமல் பரிந்துரையை திருப்பி அனுப்பினார். இந்நிலையில் தான் இன்று இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார். மாறாக செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை உள்ளதால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக தான் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

அதாவது ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்புக்கு நடுவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளதோடு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் ஆர்என் ரவியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு என்பது உச்சமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications