ட்விஸ்ட்.. தமிழர் பிரதமராக வேண்டும் என அமித்ஷா பேசவில்லையா? வதந்தி கிளப்பிய கறுப்பு ஆடு யாரு?
சென்னை: தமிழ்நாட்டுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழர் பிரதமராக வேண்டும் என பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் சர்ச்சையானது. தற்போது அமித்ஷா அப்படியான ஒரு கருத்தையே முன்வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அமித்ஷா தென்சென்னை, வேலூர் லோக்சபா தொகுதிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். சென்னையில் தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகள், பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் அமித்ஷா. இந்த ஆலோசனையின் போது, தமிழர் 2 முறை பிரதமராவதை திமுக தடுத்தது; தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என பேசியதாக தகவல்கள் வெளியாகின. இது மிகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பாஜகவைப் பொறுத்தவரை 2024 லோக்சபா தேர்தலில் வென்று 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க வியூகம் வகுத்து செயல்படுகிறது. தற்போது வரை பாஜகவின் பிரதமர் வேட்பாளர், பிரதமர் மோடிதான் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் சென்னையில் தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என அமித்ஷா பேசியதாக சொல்லப்பட்டதுதான்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்படியானால் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடியை அமித்ஷா ஏற்கவில்லையா? என ஏற்க முடியாத கேள்விகளும் கூட முன்வைக்கப்பட்டன. இன்னொரு பக்கம், தமிழ்நாட்டுக்காக ஒரு தமிழரைப் போல பிரதமர் மோடி குரல் கொடுக்கிறார். அதனால் பிரதமர் மோடிக்கு ஒரு தமிழர் முத்திரை குத்திவிடுகிறதா பாஜக? என்கிற கேள்வியும் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படுவதை முன்வைத்து அமித்ஷா இப்படி பேசியிருப்பாரோ? என்கிற கேள்வியும் எழுந்தது.
வதந்தி கிளப்பிய கறுப்பு ஆடு: ஆனால் சென்னையில் பாஜக நிர்வாகிகளிடம் அமித்ஷா அப்படி ஒரு கருத்தையே பேசவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. சென்னையில் அமித்ஷா பேசிய கருத்தை வேண்டும் என்றே ஒரு கோஷ்டி திட்டமிட்டு பொய்யாக கிளப்பிவிட்டு அரசியல் ஆதாயம் தேட பார்த்ததாகவும் இந்த விவகாரத்தில் டெல்லி பாஜக மேலிடம் கடுப்பில் இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்கிற போது அமித்ஷா அப்படி பேச வேண்டிய தேவையே இல்லை; பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இடையே சிண்டு முடிய தமிழ்நாட்டு கறுப்பு ஆடுகள் திட்டமிடுகின்றனவா? என்கிற கேள்வியையும் டெல்லி பாஜக மேலிடம் முன்வைத்திருக்கிறதாம்.
அமித்ஷா பேசியது இதுதானாம்: டெல்லி பாஜகவின் கோபத்தை தணிப்பது போல அமித்ஷா அவ்வாறு பேசவே இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும் வருகிறார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமானது அண்ணாமலையிடம் தமிழர் பிரதமர் ஆவது குறித்த அமித்ஷாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, எங்க கட்சி தொண்டர்களிடையே மட்டுமே அமித்ஷா பேசினார். 1982-ம் ஆண்டு பூத் கமிட்டி தலைவர் முதல் தேசியத தலைவர் பதவி, உள்துறை அமைச்சர் பதவி என வளர்ச்சி அடைந்தவர். பிரதமர் மோடியை பற்றியும் நன்கு அறிந்தவர் அமித்ஷா. பூத் கமிட்டி தலைவர் முதல் பிரதமர் வரை அனைவரும் அனத்து பதவிகளையும் அடைய முடியும். அதுதான் பாஜகவின் அழகு என்று அமித்ஷா குறிபிட்டதாக மட்டும் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதமராவார் என அமித்ஷா பேசவே இல்லை என்பதை உறுதி செய்வதைப் போல அண்ணாமலை இந்த பேட்டியைத் தந்திருப்பது டெல்லி மேலிடத்தின் கோபத்தை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.











Click it and Unblock the Notifications