என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி?
சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல், கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கட்சி பிளவு வரை சென்று விட்டதாக அரசியல் வட்டாரங்கள் பேசின. ஆனால் தற்போது இரு அணிகளும் மீண்டும் இணைந்துள்ளன. இந்நிலையில், அதிமுக இணைப்புக்கு காரணம் அமித் ஷாவின் தலையீடு தான் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பிற்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அதிமுகவில் பெரிய பிளவை ஏற்படுத்தியது.

இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த பலரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. மேலும், இரு அணிகளும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து ஒருவருக்கு எதிராக ஒருவர் மனு அளித்திருந்தனர்.
அதிமுக பிளவு
இந்த சூழலில், கடந்த சில நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. அதன் தொடர்ச்சியாக, சிவி சண்முகம், சி விஜயபாஸ்கரை தவிர பிற எம்.எல்.ஏ.க்கள் அதிமுக முகாமுக்கு திரும்பியுள்ளன. இந்நிலையில், அமித் ஷா நேரடி தலையீட்டால் தான் அதிமுக மீண்டும் சேர்ந்ததாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அதிமுக வட்டாரங்களில் கூறப்படும் தகவலின்படி, ஆரம்பத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை மீண்டும் வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தாராம்.
சமரச பேச்சுவார்த்தை
பின்னர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை பிரித்து வழங்குவது உள்ளிட்ட சில சமரச யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இறுதியில், முன்பு இருந்த பல பொறுப்புகளையும் மீண்டும் வழங்க தயாராக இருப்பதாக இபிஎஸ் தரப்பு சமிக்ஞை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், எஸ்.பி.வேலுமணி தரப்பு உடனடியாக சமாதானத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், டெல்லி தரப்பில் இருந்தும் சில முக்கிய ஆலோசனைகள் வந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷா
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் இருந்து, "முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுகிறார். இப்போது பிடிவாதம் பிடிப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்ற வகையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தான், எஸ்.பி.வேலுமணி அணியினர் சமரசத்திற்கு முன்வந்ததாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சி வி சண்முகம்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த சமரசம் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் தற்போது பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அருண்மொழித்தேவன் ஆகியோர் இன்னும் வேறு நிலைப்பாட்டில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
சி.வி.சண்முகத்தைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல்களும், சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளும் இன்னும் அவரை பாதித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மீண்டும் இபிஎஸ் தலைமையின் கீழ் செயல்படுவது குறித்து அவர் தீவிர யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது பற்றியும் ஒரு கட்டத்தில் சிந்தித்ததாக கூறப்படுகிறது.
சி விஜயபாஸ்கர்
ஆனால், குடும்பத்தினரும் நெருங்கிய ஆதரவாளர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. குறிப்பாக, அவரை நம்பி செயல்பட்டு வரும் கட்சித் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது அவர் எந்த முடிவையும் அறிவிக்காமல் அமைதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், சி.விஜயபாஸ்கரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. விராலிமலை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக-தவெக கூட்டணி
தேர்தலுக்கு முன்பே அதிமுக-தவெக கூட்டணி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகவும், அது நடக்காததால் அதிருப்தியில் இருந்ததாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது அடுத்த அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, தவெக நோக்கி அவர் நகரக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அதற்காக ஆதரவாளர்களின் கருத்துகளையும் அவர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
எஸ்.பி.வேலுமணி
அதேநேரத்தில், இதுவரை சி.விஜயபாஸ்கர் தரப்பிலோ, தவெக தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. இதனால், எஸ்.பி.வேலுமணி அணி மற்றும் இபிஎஸ் அணி இடையேயான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தாலும், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் போன்ற முக்கிய தலைவர்களின் அடுத்தகட்ட அரசியல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதே தற்போது அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications