கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்க! எடப்பாடிக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்! முதல்வர் வேட்பாளர் அவர் இல்லையா?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக பரபரப்பு நிலவுகிறது. அண்ணாமலை தொடங்கி அமித்ஷா வரை முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அமித்ஷா பேசிய பேச்சு எடப்பாடி பழனிச்சாமியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தேர்தல் முடியும் வரை பாஜக நிர்வாகிகள் யாரையும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக பேச வேண்டாம் என அறிவுறுத்த பாஜக தலைமையிடம் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக பாஜக அதனைத் தீவிரமாகக் கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறது. கர்நாடகா வரை ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருக்கும் பாஜக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கால் பதிக்கத் தீவிரமாகி வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். தற்போதைக்கு அது முடியாத நிலையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது பெரும் கட்சியாக வரவேண்டும் என நினைக்கிறது.

அதிமுக பாஜக கூட்டணி
இதற்காக அதிரடியாக தமிழக பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் இளம் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். சேர்ந்த உடனே அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோடு தலைவர் பதவியும் அடுத்த சில மாதங்களில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுகளால் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
அமித்ஷா
மக்களவைத் தேர்தலை அதிமுகவும் பாஜகவும் தனித்தனி அணியாகத் தேர்தலை சந்தித்த நிலையில் இரு கட்சிகளுமே படுதோல்வியைச் சந்தித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தையும் ஒரு சில எம்எல்ஏக்களையும் பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தான் தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருக்கும்போதே அதிகாரப்பூர்வமாக கூட்டணியையும் அறிவித்தார் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விவகாரங்களில் இந்த கூட்டணி பொருந்தா கூட்டணியாக பார்க்கப்படுகிறது.காரணம் பாஜகவுடன் இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என பேசிய எடப்பாடி சில நாட்களிலேயே கூட்டணியை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் அமித்ஷா சொல்பவர் தான் முதல்வர் வேட்பாளர் என பாஜகவினர் கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என அதிமுகவினர் கூறி வருகின்றனர். அண்ணாமலை தொடங்கி அமித் ஷா வரை முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமித்ஷா பேச்சு
இந்த நிலையில் தான் அமித்ஷாவின் சமீபத்திய கருத்து எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சமீபத்தில் சேனல் ஒன்றிடம் பேசிய அமித்ஷா," பீகாரில் என்டிஏ நிதீஷ்குமார் தலைமையில் தான் செயல்படுகிறது. தேர்தல் நிறைவடைந்ததும் கூட்டணி கட்சியினர் கூடி சட்டசபை தலைவர்களை தேர்வு செய்வார்கள். புதிய எம்எல்ஏக்கள் தான் அடுத்த முதல்வர் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள் எனக் கூறி அதிர வைத்திருக்கிறார்.
முதல்வர் வேட்பாளர் விவகாரம்
தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் நிதீஷ் குமார் கட்சியையே இந்த பேச்சு அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை அமித்ஷா என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. மேலும் தற்போது முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பாஜகவினர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் அது பற்றியெல்லாம் பேச வேண்டாம் என டெல்லி தலைமையிடம் எடப்பாடி அறிவுறுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications