தென்சென்னைக்கு குறி வைக்கும் பாஜக.. ஓகே சொல்வாரா எடப்பாடி.. இன்று சென்னை வருகிறார் அமித்ஷா
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் வகுப்பது தொடர்பாக தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதற்காக இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என போராடி வருகிறது.

இவை அல்லாமல் 3ஆவது அணியை தொடங்கவும் சில கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பதை பெரும்பாலான மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பாஜகவை பொருத்தவரையில் தேர்தல் களப்பணியில் இப்போதே தீவிரமாகி விட்டது.
அதிலும் மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். அதற்காக அவர் இப்போதே காய் நகர்த்தி வருகிறார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கைகோர்த்துள்ள பாஜக இந்த முறை குறிப்பிடத்தக்க இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி எத்தனை கொடுக்க ஒப்புக் கொள்வார் என்பது தெரியவில்லை. அதில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியும் அடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்சென்னை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கலந்துரையாடல் செய்ய அமித்ஷா சென்னை வருகிறார்.
இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இனஅறு இரவு 8.45 மணிக்கு அமித்ஷா சென்னைக்கு விமானத்தில் வருகிறார். விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளிக்கிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு இரவு தங்கிவிட்டு நாளை காலை அமித்ஷாவை பல்வேறு தரப்பினர் சந்திக்கிறார்கள்.
பாஜகவின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ்ஸும் அமித்ஷாவை சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து காலை 11.25 மணிக்கு ஹோட்டலில் இருந்து அமித்ஷா புறப்பட்டு சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மகாலுக்கு செல்கிறார்.
அங்கு 1 நேரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.இந்த சந்திப்புக்கு பிறகு மீண்டும் கிண்டி ஹோட்டலுக்கு வருகிறார். அங்கு மதிய உணவுக்கு பிறகு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 1.40 மணிக்கு செல்கிறார். பிறகு வேலூருக்கு 2.30 மணிக்கு செல்லும் அவர் அங்கிருந்து காரில் பள்ளிக்கொண்டாவில் உள்ள காந்தனேரிக்கு செல்கிறார்.

அங்கு நடத்தும் பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் மீண்டும் வேலூரில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர், மாலை 5.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நோக்கி விமானத்தில் புறப்படுகிறார். அங்கு வால்டையர் ரெயில்வே கிரவுண்ட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்து சாலை மார்க்கமாகவே போர்ட் கெஸ்ட் ஹவுஸுக்கு வருகிறார். இரவு உணவுக்கு பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாகவே வுடா குழந்தைகள் தியேட்டர் பகுதிக்கு செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் இரவு 9.25 மணிக்கு விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்படுகிறார். அமித்ஷாவின் இந்த தமிழக பயணத்தால் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications