டிசம்பர் 15ல் தமிழ்நாடு வரும் அமித்ஷா.. கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு?
சென்னை: டிசம்பர் 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் நடக்கும் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார். அதேபோல் தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணியை விரிவாக்கம் செய்வதற்கான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி அமைந்து 8 மாதங்களில் வேறு எந்த கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கப்படவில்லை. அதிமுக மற்றும் பாஜக தரப்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

இதனிடையே நேற்று முன்தினம் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள் தொடர்பாக முடிவு எடுக்கக் கூடிய முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாளை நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு அமித்ஷாவை சந்திக்க உள்ளார். அதேபோல் கடந்த 2 வாரங்களில் ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை ஆகியோரை அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி அமித்ஷா சென்னை வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். அதேபோல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அமித்ஷா வருகையின் போது என்டிஏ கூட்டணி விரிவாக்கம் செய்யப்படுவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமாகா, அன்புமணி தரப்பு பாமக உள்ளிட்டவை திமுகவுக்கு எதிரான கூட்டணியில் இடம்பெறுவோம் என்று கூறிவிட்டன. இதனால் இந்தக் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்ததாக அறிவிக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications