அமைச்சர்களின் அடாவடி பேச்சு.. களத்தில் இறங்கும் டிடிவி தினகரன்.. அமமுக முக்கிய அறிவிப்பு!
சென்னை: திமுக அமைச்சர்களின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் அக்.12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அமமுக அறிவித்துள்ளது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், ஆதரவாளர்களை ஓபிஎஸ் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.
இதனிடையே ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் விரைவில் கூட்டாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சசிகலாவை நேரடியாக சந்தித்தார். அதேபோல் மறுபக்கம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகவும், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பேசி வந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமமுக தரப்பில் கட்சி செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமமுக அறிவிப்பு
இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் அக். 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுத்துறைகளில் நடக்கும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் அக். 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்க உள்ளார். அதே நாளில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டங்களில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகம்காட்டும் டிடிவி தினகரன்
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அமமுகவின் செல்வாக்கை அதிமுக நிர்வாகிகளுக்கு உணர்த்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரன் திடீரென பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து வேகம் காட்டுவது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
