அதே இடம், அதே நேரம்.. ஆகஸ்ட் 15ல் அமமுக பொதுக்குழு கூட்டம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு!
சென்னை: அமமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை ஓபிஎஸ்-ம் மாறிமாறி நீக்கி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென கட்சி செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
சேலம், மதுரை, தேனி என அடுத்தடுத்த மாவட்டங்களில் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். தேனியில் நடைபெற்ற கூட்டத்தின் போது டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளரான சையது கான் சந்தித்தார். இதனால் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபத்திலேயே பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளை நிலைநாட்டிட போராடும் வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெறும்.
இதில் அனைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழோடு கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமமுகவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications