Amul பால் விலை நாளை முதல் கிடுகிடு உயர்வு.. லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலையேற்றம்
சென்னை: நம் நாட்டில் பிரபலமாக உள்ள 'அமுல்' பால் பாக்கெட் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை அதிகரிக்க உள்ளது.
குஜராத் கூட்டுறவு பால் மார்க்கெட்டிங் அமைப்பு சார்பில் 'அமுல்' என்ற பால் மற்றும் பால் சார்ந்த பிற தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 'அமுல்' பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இந்தியா முழுவதம் பிரபலமாக உள்ளன.

இந்நிலையில் தான் 'அமுல்' பால் விலை திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக 'அமுல்' நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''குஜராத் கூட்டுறவு பால் மார்க்கெட்டிங் கூட்டமைப்பு சார்பில் ரூ.4 முதல் 5 சதவீதம் வரை மாநிலம் முழுவதும் பால் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 'அமுல்' நிறுவனத்தின் பல்வேறு பால் வகைகளின் விலைகள் ரூ.2 முதல் ரூ.4 வரை நாளை (நவம்பர் 12) முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத வகையில் உள்ளது. பால் கொள்முதல் விலை, பால் புராசஸிங், பேக்கேஜிங், வாகனங்களுக்கான எரிபொருள், மாடுகளுக்கான பசுமை மற்றும் காய்ந்த தீவனம், ஆயில் கேக் உள்பட கால்நடைகளுக்கான உணவு இன்கிரிடியன்ட்ஸ்களின் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல் குஜராத் உள்பட பிற மாநிலங்களில் பருவமழை குறைவாக பெய்துள்ளது. இதனால் தீவன பிரச்சனை உள்ளதோடு, பால் உற்பத்தியாளர்களும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி கேட்கின்றனர். இதனால் தான் தற்போது பால் விலை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமுல் நிறுவனத்தின் Taaza (Toned Milk) ஒரு லிட்டர் பால் ரூ.2 வரை உயர்ந்து நாளை முதல் ரூ.62க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல் கோல்ட் (Full Cream Milk) பால் லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரித்து ரூ.80க்கு விற்பனையாக உள்ளது. அமுல் நிறுவனம் சார்பில் நடப்பு 2026ம் ஆண்டில் இதுவரை விலையேற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் நாளை முதல் முதலாக அதிகரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
