சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக வேகமாக இடிக்கப்படும் முக்கியமான பாலம்.. அடியோடு மாறும் போக்குவரத்து
சென்னை: சென்னையில் மெட்ரோ நிறுவனம், சுரங்க ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலையை கடந்து மயிலாப்பூருக்கு செல்லும் அஜந்தா பாலத்தை இடிக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறது.
சென்னையில் விம்கோ நகர்- விமான நிலையம், விம்கோ நகர்- கோயம்பேடு வழியாக பரங்கிமலை என இரண்டு முக்கிய வழித்தடத்தில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருக்கிறது. 2 வது கட்டமாக தொடர்ந்து மாதவரம்- சிறுசேரி, மாதவரம் பால்பண்ணை-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் என 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 119 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இது 43 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையாகும். இதில் கலங்கரை விளக்கம் உள்பட சென்னையின் மையப்பகுதிகளில் மொத்தம் 48 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மாதவரம்- சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் மொத்தம் உள்ள 45.4 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 26.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
சுரங்கப்பாதை அமைக்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் இடையூறாக இருக்கும் என்பதால் அந்த பாலங்களை இடித்து வருகிறது சென்னை மெட்ரோ. அதேநேரம் சுரங்கப்பாதை கட்டிய பிறகு மீண்டும் பாலத்தை கட்டிதர முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலையை கடந்து மயிலாப்பூருக்கு போகும் அஜந்தா பாலம் மற்றும் அடையாறில் இருந்து திருவான்மியூர் செல்லும் மேம்பாலம் ஆகியவற்றின் ஒரு பகுதியை மெட்ரோ ரயில் பணிக்காக இடிக்க மெட்ரோ நிறுவனம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் மெட்ரோ நிறுவனம் அறிவித்தபடி, மைலாப்பூர் ராயப்பேட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ராயப்பேட்டை அஜந்தா பாலம் இடிக்கும் பணி இப்போது தீவிரமாக நடக்கிறது
ராயப்பேட்டையில் சுரங்க ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதற்காக ராயப்பேட்டையில் உள்ள அஜந்தா பாலத்தின் மொத்த நீளமான 390 மீட்டர் நீளத்தில் 210 மீட்டர் நீளத்தை இடித்து வருகிறது சென்னை மெட்ரோ நிறுவனம். பாலத்தை இடிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாதி பணிகள் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராயப்பேட்டையில் மெட்ரோ சுரங்க ரயில் சுமார் 5 வருடத்திற்குள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரம் சுமார் 4 வருடங்களில் இந்த பாதையில் போக்குவரத்துக்கு அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி, நந்தனம் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் சுமார் 4 வருடம் வரை மிக குறுகிய சாலையில் பயணித்தார்களோ அதுபோல் சில காலம் நெருக்கடியுடன் பயணிக்க வேண்டியதிருக்கும். அதேநேரம் பணிகள் முடிந்த பின்னர் இயல்பு நிலைக்கு போக்குவரதது திரும்பும்.
ராயப்பேட்டை அஜந்தா பாலம் போல், அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட உள்ளது. அதாவது அடையாறு பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருடன் இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி விரைவில் இடிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications