"ரூ.4,800.." தங்கம் விலை இந்தளவுக்கு குறையலாம்! சொல்வது ஆனந்த் சீனிவாசன்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அது மேலும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தார்.
தங்கம் விலை கடந்த சில காலமாகப் பெரிதளவில் ஏற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. கொரோனா சமயத்தில் திடீரென உச்சத்திற்குச் சென்ற தங்கம் விலை, இப்போது மெல்லக் குறைந்து வருகிறது.

இப்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 5,300 என்ற ரேஞ்சிலேயே இருக்கிறது. இப்போது பண்டிகை மற்றும் திருமண காலம் என்பதால் பலரும் தங்கத்தை வாங்கி வரும் நிலையில், விலை அப்படியே இருக்கிறது.
தங்கம்: பொதுவாக யாராக இருந்தாலும் நமது நாட்டில் குறிப்பிட்ட சதவிகிதம் செல்வத்தைத் தங்கமாகவே வைத்திருப்பார்கள். நீண்ட கால நோக்கில் தங்கம் எப்போதும் அதிகரிக்கவே செய்யும், மேலும் அவசரக் காலத்தில் தங்கத்தை எளிதாக விற்றோ, அடமானம் வைத்தோ பணமாக மாற்ற முடியும் என்பதால் பொதுமக்கள் தங்கள் செல்வத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தங்கமாக வைத்திருப்பார்கள். இதன் காரணமாகவே உலகில் அதிகபட்ச தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.
பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசனும் கூட எப்போதும் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவார். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கத்தைப் போல வேறு எதுவும் ஆபத்தான காலத்தில் உதவாது என்பதால் ஆனந்த் சீனிவாசன் தொடர்ந்து தங்கத்தை வாங்க வலியுறுத்துவார். குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திடமும் குறைந்தது 400 கிராம் தங்கம் இருக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தியே வந்தார்.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே தங்கம் எதனால் குறைகிறது.. தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்... எந்தளவுக்குத் தங்கம் விலை குறையும் என்பவை குறித்து அவர் தனது சமீபத்திய வீடியோவில் விளக்கி இருக்கிறார். அதில் அவர் தங்கம் எதற்காக இந்தளவுக்குக் குறைகிறது என்பது குறித்த காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த போகிறது. இதனால் ரிசர்வ் வங்கியும் கூட வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது. இதனால் தங்கம் விலை குறையும். ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்காவில் 18600-18500 டாலர் வரை வரும். ஆனால் இந்தியாவில் ரூபாய் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருவதால் வெளிநாடுகளில் குறைந்த அளவுக்கு இந்தியாவில் தங்கத்தின் விலை குறையவில்லை.

ரூ. 4800: எனவே, அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உயர்த்த தங்கத்தின் விலை மேலும் குறையும். அடுத்த 12 முதல் 18 மாதங்கள் தங்கம் விலை நிச்சயமாகத் தொடர்ந்து குறையும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் போதுதான் தங்கம் விலை அதிகரிக்கும். ஒரு கிராம் தங்கம் விலை 4800 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. இறங்க இறங்கத் தங்கத்தைத் தாராளமாக வாங்கலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க மத்திய வங்கி ஒவ்வொரு முறையும் 0.25% வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் தங்கம் விலை அமெரிக்காவில் குறையும் என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் அமெரிக்க டலாருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருவதால் வெளிநாடுகளில் தங்கம் விலை குறையும் அளவுக்கு இந்தியாவிலும் தங்கம் விலை அந்தளவுக்குக் குறையாது என்று தெரிவித்த அவர், இருப்பினும் இங்கே ஒரு கிராம் தங்கம் 4800 ரூபாய் வரை போகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications