ரூ 100 கோடி! 7 மணி நேர விசாரணை, 246 கேள்விகள்! spelling mistake -லாம் கரெக்ட் செய்தேன்! அன்பில் கூல்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க ரூ 100 கோடி வரை பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் 246 கேள்விகள் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜரான அன்பில் மகேஷ், கூறியதாவது: என்னிடம் 246 கேள்விகள் கேட்கப்பட்டன. என் மீது தவறு இல்லை என்பதால் அனைத்து கேள்விகளுக்கும் பொறறுமையாக பதில் அளித்தேன். மீண்டும் அழைத்தாலும் நான் பொறுமையாக பதில் அளிப்பேன்.

அந்த கேள்விகளை பிரின்ட் அவுட்டாக கொடுக்கு படித்து பார்க்க சொன்னார்கள். நான் படித்த இடத்தில் சிலவற்றில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தது. அதை சுட்டிக் காட்டினேன். அவர்களும் திருத்திக் கொண்டு முறையாக கையொப்பம் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாக 177 பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷுக்கு சொந்தமான 9 இடங்களில் கடந்த 16 ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
7 மணி நேர விசாரணை
இந்த சோதனையின்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டது. அதன் பேரில் அவர் நேற்று காலை 11 மணிக்கு தனது வழக்கறிஞருடன் ஆஜரானார். அவரிடம் 7 மணி மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த போதுதான், தன்னிடம் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன என்பதை அன்பில் விளக்கியிருந்தார்.
அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த சோதனை குறித்து சென்னை குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நடந்தது என்ன?
"தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி பி.டி. அரசகுமார் என்பவரை ஜூன் 26 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசு ஆவணங்கள்
இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலுவலகங்களைச் சேர்ந்த பல்வேறு அரசு அலுவலர்களும் விசாரணை செய்து, அதன் தொடர்புடைய அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
177 தனியார் பள்ளிகள் பாதிப்பு
இதுவரை, 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. மேலும் புகார்கள் தொடர்நது பெறப்பட்டு, நிதி மோசடி தொடர்பான விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
அரசகுமார்
இவற்றில் ஏ1 அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் மற்றும் ஏ2 முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதன் தொடர்பான சரிபார்ப்பு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இவர்களது குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பென்டிரைவில் என்ன இருக்கிறது?
மேற்கண்ட சோதனைகளின்போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள்/பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர டிஜிட்டல்/மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு, நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவை பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினால் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
எத்தனை இடங்களில் சோதனை
இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சி 2 இடங்களிலும் 16.09.2026 காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
