இதுதான் அந்த 2வது ஃபைலா? அப்போ கேஎன் நேரு.. இப்போ அன்பில் மகேஷ்! திருச்சி தலைகளை குறிவைக்கும் விஜய்?
சென்னை: திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட பிடி அரசகுமாரின் வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக டெண்டர் முறைகேடு வழக்கில் கேஎன் நேருவில் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
பி.டி.அரசகுமார்
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில், திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை ஏழு மணி முதல் திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய குற்றப்பிரிவு
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது சோதனை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், திருச்சி மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடக்கிறது. சோதனை தகவல் அறிந்து அது சகோதரர் அன்பில் பெரியசாமி மற்றும் கட்சியினர் இல்லத்திற்கு வந்தனர்.
கேஎன் நேரு
தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவும் தனது ஆதரவாளர்களுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டுக்கு வந்தார். ஆனால் சோதனை நடப்பதால் அன்பில் மகேஷை சந்திக்க முடியாது என போலீசார் கூறியதாக அவர் பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து தமிழக வெற்றிக்காக அரசு நடவடிக்கை எடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் விஜய்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் தன்னிடம் இரண்டு ஃபைல்கள் இருப்பதாகவும் அதனை ஓபன் செய்ய வைத்து விடாதீர்கள் என பேசி இருந்தார். அவர் பேசிய சில நாட்களிலேயே திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
பள்ளி கல்வித் துறை
நகராட்சி நிர்வாகத்துறையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கேஎன் நேரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித் துறையில் முறைகேடு நடந்ததாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு நடக்கிறது. இருவருமே திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், திமுகவின் முக்கிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
