செளமியாவுக்கு அமைச்சர் பதவி குறி.. பாஜக கூட்டணியை விட்டு வெளியேற தயார்.. அன்புமணி பேச்சின் பின்னணி!
சென்னை: செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியை குறி வைத்து, என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேற பாமக முடிவு எடுத்துவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே காவிரி விவகாரத்தை கையில் எடுத்து அன்புமணி தீவிரமாக களமாடுவதாகவும், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று ராகுல் பேசினால், என்டிஏ கூட்டணியை விட்டு வெளியேறத் தயார் என்று அறிவித்ததாகவும் தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் பாமகவின் உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அரசியலில் இருந்து ராமதாஸ் விலகிவிட்ட சூழலில், பாமக மொத்தமாக அன்புமணியின் கைகளுக்குள் வந்துவிட்டது. இதன்பின் மீண்டும் பாமகவின் தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் தவெக உடனும் அன்புமணி நெருக்கம் காட்டி வருகிறார்.

அரசியல் ரீதியாகவும் அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே காரணம் என்று அக்கட்சியினர் நம்ப தொடங்கி இருக்கின்றனர். இதனால் பாமகவுக்கு மவுசு கூடி இருப்பதாக அன்புமணி உற்சாகத்தில் இருக்கிறார். தற்போது பாமக தொண்டர்களின் ஒரே எண்ணம் செளமியா அன்புமணியை அமைச்சரவையில் இணைப்பது தான். அதுவும் கூடிய விரைவில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்த பின் அன்புமணி ராஜ்ய சபா சீட்டை கைப்பற்றினார். ஆனால் சட்டசபைத் தேர்தலுக்கு பின் அன்புமணியின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மத்திய அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று பாமக தீவிரமாக இருந்தது. ஆனால் டெல்லி தலைமையோ தேர்தல் தோல்விக்கு பின் அன்புமணியை கண்டுகொள்ளவில்லை.
இதனால் அன்புமணி அதிருப்தி அடைந்தார். இதன் காரணமாக முதற்கட்டமாக பாமக உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இதன்பின் பாமகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள அன்புமணி, திடீரென ராகுல் காந்தி மேகதாதுவில் அணைக் கட்ட கூடாது என்று பேசினால், என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்ததாக பார்க்கப்பட்டாலும், அன்புமணி எதற்காக என்டிஏ கூட்டணியில் இருந்து விலக தயார் என்று அறிவித்தார் என்பது சந்தேகத்தை எழுப்பியது. இதனால் செளமியா அன்புமணி அமைச்சரவையில் இடம்பிடிக்க பாஜக உடனான கூட்டணி ஒரு தடையாக இருப்பதாக அன்புமணி கருதி இருக்கலாம். இதனை தவெக தலைமையும் கூட சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின் காவிரி விவகாரத்தை வைத்தே என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டு, தவெக பக்கம் நகரும் எண்ணத்தில் அன்புமணி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் விசிக உடன் நெருங்கிய நட்பில் இருக்கும் தவெக, பாமகவை சேர்த்து கொண்டால், அது கூட்டணிக்கே சிக்கலாக மாறிவிடும் என்றும் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
