பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி!
சென்னை: மகளிர் தொகை 2000 ஆயிரம் ரூபாயக கொடுக்கப்படும் எனவும், அனைத்து பெண்களுக்கும் மகளிர் தொகை வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பெண்களின் திருமண வயதைப் 21 ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர்," தமிழகத்தில் சமூக நீதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
சாதி என்றால் சிலருக்கு பிடிக்கவில்லை,அதனால் தான் சமூக நீதி கணக்கெடுப்பு என கூறுகிறோம். சமூக நீதியை 100 அடி ஆழத்தில் திமுக புதைத்து விட்டது திமுக. 5 ஆண்டு காலத்தில் திமுக 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.

திமுகவின் ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்படும். தொழில் முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வழங்கப்படும். திமுக ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே முதலீடு பெற்றுள்ளது. 12 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் மட்டுமே போட்டு உள்ளனர்.
அரசுப்பள்ளியில் 12 ம் வகுப்பு வரை தரமான இலவச கல்வி. ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும். 10 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. 75 லட்சம் மாணவர்களில் இருந்து 45 லட்சமாக குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 35 லட்சத்தில் இருந்து 65 லட்சமாக அதிகரித்துள்ளது. 60 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆறாம் வகுப்பு முதல் புத்தகப் பை இல்லா கல்வி முறை. 6 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக் கணினி.
மாணவர் இடைநிற்றலை தடுக்க ஏழை மாணவர்களுக்கு 10 ம் வகுப்பில் மாதம் ரூ. 500.
11, 12 ம் வகுப்பில் மாதம் ரூ. 1000 நிதி உதவி. கடந்த முறை தேர்தல் அறிக்கையில் "நீட் தேர்வு விலக்கு" என்று குறிப்பிட்ட திமுக, நீட் பற்றிய வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் இருந்து நீக்கி விட்டது. தமிழகத்தில் நீட் விலக்கு பெற பாமக வலியுறுத்தும். தரமான கல்வியும், தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.
டெட் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படாது
தமிழகத்தில் தற்போது 1300 "108" ஆம்புலன்ஸ் தான் உள்ளது. திமுக ஆட்சியில் 70 ஆம்புலன்ஸ் மட்டுமே 5 ஆண்டுகளில் வாங்கி உள்ளனர். பாமக ஆட்சிக்கு வந்தால் 2500 ஆம்புலன்ஸாக அதிகரிக்கப்படும். ஆண்டுதோறும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நீர் பாசன திட்டத்திற்கு ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000 படங்கள் வெளியாக வில்லை. திமுக முதல் குடும்பம் மட்டுமே தமிழகத்தில் சினிமா துறையை கையில் வைத்துள்ளது. திமுக ஆட்சியை அகற்ற சினிமா துறை சார்ந்த மக்கள் கொந்தளிப்பாக உள்ளனர். திமுகவின் சினிமா சிண்டிகேட் முடிவு கட்டப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த 74 ஆண்டுகளாக 4.56 லட்சம் கோடி நேரடி கடன் இருந்தது. ஆனால் திமுக 2021 பொறுப்பேற்ற பிறகு 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்." என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications