24 மணி நேர சட்டவிரோத மது விற்பனை.. கொதித்த பெண்கள்.. சாலையில் பிராந்தி ஆறு.. அன்புமணி பாராட்டு
சென்னை: தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் கிராமத்தில் 24 மணி நேர சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பூதிநத்தம் கிராமத்தில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த ஜெயராமன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் போராட்ட வடிவம் சரியா? என்ற வினா ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் நோக்கமும், உணர்வும் பாராட்டத்தக்கவை. அவர்களை வணங்குகிறேன். பூதிநத்தம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதால், மாணவர்களும், சிறுவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன.
ஆனால், அது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படாத நிலையில் தான் பெண்கள் பொங்கியெழுந்து போர்க்கோலம் பூண்டிருக்கின்றனர். பூதிநத்தம் கிராமத்தில் மட்டும் தான் இத்தகைய நிலை என்றில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான். மாநிலம் முழுவதும் சட்டப்பூர்வமாக 5,329 மதுக்கடைகள் உள்ளன என்றால், ஒவ்வொரு கடைக்கும் 5 முதல் 10 சந்துக் கடைகள் உள்ளன. அவற்றில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது.
அதனால் சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும், சில நேரங்களில் கொலைகளும் நிகழ்கின்றன. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படும் சந்துக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பூதிநத்தம், பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மதுக்கடை கிடையாது. மது அருந்த வேண்டுமானால் 15 கிலோமீட்டர் கடந்த பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்குதான் செல்ல வேண்டும். இதனால் இந்த மலைக்கிராமங்களில் உள்ள சிலர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி வந்து 24 மணி நேரமும் வீட்டுக்குள் வைத்து தடையின்றி மது விற்பனை செய்து வந்ததால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாப்பாரப்பட்டி போலீஸார் மற்றும் வருவாய் துறையினரிடம் முறையிட்டும் மதுவிற்பனையை கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூதிநத்தம் கிராமத்து பெண்கள் சேர்ந்து சட்டவிரோதமாக சந்துக் கடை வைத்து மது விற்கும் ஜெயராமன் வீட்டை முற்றுகையிட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை கைப்பற்றி அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மதுபான பாட்டில்களை வீதியில் கொட்டி கல்லை தூக்கி போட்டு சல்லி சல்லியாக உடைத்தனர். இதனால் அந்த சாலையில் ரம், பீர், விஸ்கி, பிராந்தி என ஆறாக ஓடியது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தகவலறிந்து மற்றொரு இடத்தில் இருந்த 200 மதுபாட்டில்களை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றனர். மேலும் அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications