பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாததால் மனஉளைச்சல்! விவசாயி பலி! அன்புமணி கொந்தளிப்பு
சென்னை: முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் விவசாயி ஒருவர் இறந்தது வேதனையளிக்கிறது என்றும்
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சோமசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறு, குறு விவசாயியான சோமசுந்தரம் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமது வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இரு முறை கடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும் ரூ.75 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. சோமசுந்தரம் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 4-ஆம் தேதி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம்.
தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்த சோமசுந்தரம் மட்டுமின்றி லட்சக்கணக்கான உழவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்தது உழவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் மன உளைச்சலைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications