டைம் பார்த்து.. "தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்" அன்புமணி போட்ட பதிவு!
சென்னை: தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி பதிவிட்டுள்ளார். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி என்று பதிவிட்டுள்ள அன்புமணி, தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளிலும் தந்தையை வணங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. வன்னியர் சங்க மாநாடு முடிவடைவதற்கு முன்பாகவே அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். இதன்பின் இருவருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாளும் பிரச்சனை தீவிரம் அடைந்து வருகிறது.

ராமதாஸ் குற்றச்சாட்டு
அதிலும் 2 நாட்களுக்கு முன்பாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என் கடைசி மூச்சு வரை அன்புமணிக்கு தலைவர் பதவி கிடையாது. உலகளவில் விருது பெற்றால் மட்டும் போதாது. தாய், தந்தையரிடமும் விருது பெற வேண்டும். எங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று கூறினால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று சொல்வார்.
பிபி அதிகமாகிறது
ஆனால் மைக்கை கொண்டு எறிவார்.. பாட்டிலை எடுத்து வீசுவார்.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறினால், அது பொய் என்பார். அன்புமணியை நினைத்தால் வலி ஏற்படுகிறது. அவரை நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அது பாசத்தால் அல்ல.. பாசமெல்லாம் எப்போதோ போய்விட்டது. அவரை நினைத்தால் பிபி அதிகமாகிறது.. தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை என்று தெரிவித்தார்.
தந்தையர் தினம்
அதுமட்டுமல்லாமல் அன்புமணியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் மோசமாக போய்க் கொண்டிருப்பதாகவும் கூறி இருந்தார். இதனால் தந்தை மற்றும் மகன் இடையிலான மோதல் உச்சத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தந்தையர் தினமான இன்று, அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கியமான ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.
அன்புமணி பதிவு
அதில் அன்புமணி, தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்! என்று பதிவிட்டுள்ளார்.
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 15, 2025
தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.
ஆக்குதல் அன்னையரின் பணி என்றால்,
அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.
தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!
ராமதாஸ் vs அன்புமணி
அண்மையில் பாமக சார்பாக அன்புமணி உரிமை மீட்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அழைப்பிதழில் ராமதாஸ் புகைப்படம் இன்றி அன்புமணி வெளியிட்டிருந்தார். அதேபோல் இன்று காலை ராமதாஸின் தீவிர ஆதரவாளரான அன்பழகனை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications