பாமக ஆட்சியமைப்பது உறுதி.. தனித்துப் போட்டினு சொல்லவே இல்லையே.. அன்புமணி ராமதாஸ் சொல்வது என்ன?
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தமிழகத்தில் பாமக தலைமையிலான காமராஜர் ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றால் தனித்துப் போட்டியிடுவோம் என அர்த்தமல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் பாமக தலைமையிலான ஆட்சி அமையும் எனக் கூறி வரும் நிலையில், மூன்றாவது அணி அமைக்க பாமக திட்டமிடுகிறத என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

பாமக ஆட்சி
வரும் 2026ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும், பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் அன்புமணி ராமதாஸ். சமீபத்தில் பா.ம.க தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ், 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், பாமக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில், காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

காமராஜர் பிறந்த நாள்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜரின் திருவுருவச் சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார் அன்புமணி ராமதாஸ்.

காங்கிரஸார் கூட மறந்துவிட்டார்கள்
அப்போது பேசிய அவர், கல்விக்கண் திறந்தவர் காமராஜர். வறுமையில் வாடும் மாணவர்கள் பசியோடு படிக்க முடியாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர். இதுவரை எவரும் செய்யாத கல்வி புரட்சியை செய்து காட்டியவர், தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து தொழில் புரட்சி செய்தவர். காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாமகவின் கனவு. நிச்சயமாக அதை பாட்டாளி மக்கள் கட்சி செய்து காட்டும். காங்கிரஸ்காரர்கள் கூட காமராஜர் ஆட்சியை மறந்துவிட்டார்கள். பாமக தான் காமராஜர் ஆட்சி பற்றி தொடர்ந்து பேசி வருகிறது.

பாமக தலைமையில்
2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக தலைமையில் கூட்டணி அமையும். அப்போது அனைவரும் சேர்த்து ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் வாழ்த்துக் கூறியுள்ளோம். பாமக தலைமையில் கூட்டணி அமையும் என்றால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று அர்த்தமல்ல. அடுத்த 10,15 ஆண்டுகளுக்கு எந்த கட்சியும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. எங்கள் இலக்கு என்பது 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தான்" எனத் தெரிவித்தார்.

நெருக்கடி கூடாது
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "ஜனநாயகத்தின் அடிநாதம் என்பதே நாடாளுமன்றம்தான். அதில் இயல்பாக பேசுகிற வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நெருக்கடிகளை கொடுக்கக்கூடாது. எங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications